'பிகில்' உடைகள் தொடர்பான சர்ச்சை: எஸ்.வி.சேகர் பதில்

'பிகில்' உடைகள் தொடர்பான சர்ச்சை: எஸ்.வி.சேகர் பதில்
Updated on
1 min read

'பிகில்' உடைகள் விற்பனை தொடர்பாக எழுந்துள்ள சர்ச்சைக்கு எஸ்.வி.சேகர் பதில் அளித்துள்ளார்.

அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாகவுள்ள படம் 'பிகில்'. அக்டோபர் 25-ம் தேதி வெளியாகும் இந்தப் படத்தில் 2 கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் விஜய். இதில் வயதானவராக விஜய் நடித்துள்ள ராயப்பன் கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ளது.

இந்தக் கதாபாத்திரம் கருப்பு சட்டை, காவி கலர் வேஷ்டி, கழுத்தில் சிலுவை என வித்தியாசமாக வடிவமைத்துள்ளார் அட்லீ. இதே போல உடைகளை வடிவமைத்து விற்பனைக்குக் கொண்டுவந்துள்ளனர். முதல் நாள் முதல் காட்சி 'பிகில்' படத்துக்குப் போகும்போது, இந்த உடையில் செல்லலாம் என்று பலரும் வாங்கி வருகிறார்கள்.

விற்பனையில் இருக்கும் இந்த உடையில் மொத்த செட்டையும் புகைப்படம் எடுத்து, இதைப் பற்றி உங்களுடைய கருத்து என்ன என எஸ்.வி.சேகரிடம் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு எஸ்.வி.சேகர் தனது ட்விட்டர் பதிவில், "இதைப் பெரிதுபடுத்துவது சரியல்ல என்பது என் கருத்து. விஜய் ஒரு நல்ல நடிகர்.

அவரது ரசிகர்களுக்காக விற்கப்படும் பொருட்கள். இதில் காவி வேட்டி, ருத்திராட்சம் கூட இருக்கின்றதே. இதை விற்கும் கடைக்காரர்கள் அனைவரும் மாற்று மதத்தினரா? விஜய் விபூதி பூசி நடிக்கும்போது பிடிக்கும் நமக்கு, அவர் சிலுவை அணியும்போது பிடிக்காதது சரியல்ல. அவர் எங்காவது பொது வெளியில் தன் மதத்தை மட்டும் உயர்வாகப் பேசி மற்ற மதத்தைத் தாழ்வாகப் பேசி பார்த்துள்ளீரா. வேற்றுமையில் ஒற்றுமை” என்று தெரிவித்துள்ளார் எஸ்.வி.சேகர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in