

தென்னிந்திய சினிமாவிலிருந்து யாரும் அழைக்கப்படவில்லை. ஏன் இந்த பாரபட்சம்? என்று பிரதமர் மோடியிடம் குஷ்பு கேள்வி எழுப்பியுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடியுடன் பாலிவுட் நடிகர்கள் மற்றும் திரைப்பட இயக்குநர்கள் இணைந்து மகாத்மாவின் 150-வது ஆண்டு கொண்டாட்டத்தில் காந்திஜிக்கு சிறப்பு அஞ்சலி செலுத்தினர். நிகழ்ச்சியின் போது, மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த நாளை முன்னிட்டு #ChangeWithin என்ற 100 விநாடி கலாச்சார வீடியோ ஒன்றை பிரதமர் வெளியிட்டார்.
இந்த விழாவில் ஷாரூக் கான், அமீர் கான், சோனம் கபூர், கங்கணா ரணாவத், இயக்குநர் ராஜ்குமார் சந்தோஷி, தயாரிப்பாளர் ஏக்தா கபூர், ரகுல் ப்ரீத் சிங், ஜாக்குலின், தயாரிப்பாளர் போனி கபூர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதில் கலந்துகொண்ட அனைவருமே பிரதமர் மோடியுடன் எடுத்துக் கொண்ட செல்ஃபிக்கள் இணையத்தை ஆட்கொண்டன.
இந்நிகழ்ச்சியில் எந்தவொரு தென்னிந்திய நடிகரும் கலந்து கொள்ளவில்லை. இதற்கு ராம்சரணின் மனைவி உபாசனா தனது அதிருப்தியை வெளிப்படுத்தி இருந்தார்.
அவரைத் தொடர்ந்து குஷ்பு தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
''இந்திய சினிமாவின் சார்பாக பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்த அனைவருக்கும் என் வணக்கங்கள். ஆனால், பிரதமருக்கு ஒன்று நினைவூட்ட விரும்புகிறேன். இந்தி திரைப்படங்கள் மட்டுமே நமது தேசத்தின் பொருளாதாரத்துக்குப் பங்காற்றவில்லை. நம் தேசத்தின் பிரதிநிதியாக இல்லை. தென்னிந்திய சினிமாதான் மிகப்பெரிய பங்களிக்கிறது. தென்னிந்திய சினிமாதான் நமது தேசத்துக்குத் தேசிய அளவில் பிரதிநிதியாக இருக்கிறது.
சிறந்த திறமைகள் எல்லாம் தென்னிந்தியாவில்தான் உள்ளன. மிகப்பெரிய சூப்பர் ஸ்டார்கள் தென்னிந்தியாவிலிருந்துதான் வருகிறார்கள். இந்தியாவின் சிறந்த நடிகர்கள் தென்னிந்தியாவைச் சேர்ந்தவர்கள்தான். சிறந்த தொழில்நுட்பக் கலைஞர்கள் தென்னிந்தியர்கள்தான். பிறகு ஏன் தென்னிந்திய சினிமாவிலிருந்து யாரும் அழைக்கப்படவில்லை. ஏன் இந்த பாரபட்சம்?
தென்னிந்திய சினிமாவை நமது தேசத்தின் பெருமையாக உயர்த்திய எனது முன்னோடிகளும், ஆசான்களும் அழைக்கப்பட்டு, இதே மரியாதை காட்டப்பட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும். அவர்கள் அதற்குத் தகுதியானவர்கள் என்று நான் நினைக்கிறேன். பிரதமர் இந்த விஷயத்தைக் கவனிப்பார் என்று எதிர்பார்க்கிறேன்''.
இவ்வாறு குஷ்பு தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.