

'அசுரன்' பார்த்துவிட்டுப் படக்குழுவினருக்குத் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார் மகேஷ் பாபு.
வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ், மஞ்சு வாரியர், கென் கருணாஸ், டிஜே, பாலாஜி சக்திவேல் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'அசுரன்'. தாணு தயாரிப்பில் வெளியான இந்தப் படத்துக்கு விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
தனுஷ் நடிப்பில் வெளியான படங்களுள் முதல் 100 கோடி ரூபாய் வியாபாரத்தைக் கடந்த படம் என்று விநியோகஸ்தர்கள் தெரிவித்துள்ளனர். இந்த ஆண்டு வெளியாகி வரவேற்பைப் பெற்ற படங்களின் பட்டியலில் 'அசுரன்' படமும் இடம்பெற்றுள்ளது. வெற்றிமாறன் இயக்கம், தனுஷ் நடிப்பு உள்ளிட்டவற்றுக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.
தற்போது தெலுங்குத் திரையுலகின் முன்னணி நடிகரான மகேஷ் பாபுவும் இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு, படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது ட்விட்டர் பதிவில் "'அசுரன்' அசலான, ஆழமான, உண்மையான ஒரு படம்... மிகச்சிறந்த சினிமா.. வாழ்த்துகள் தனுஷ், வெற்றிமாறன், பிரகாஷ்ராஜ், ஜி.வி.பிரகாஷ், வேல்ராஜ் மற்றும் ஒட்டுமொத்த 'அசுரன்' குழுவுக்கும்" என்று தெரிவித்துள்ளார் மகேஷ் பாபு.
'அசுரன்' படத்தைத் தொடர்ந்து கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் தனுஷ். இதன் படப்பிடிப்பு லண்டனில் நடைபெற்று வருகிறது.