

விமான நிலையத்திலிருந்து வீடு வரை துரத்திய ரசிகரை, வீட்டிற்குள் அழைத்து புத்திமதி கூறி புகைப்படம் எடுத்து அனுப்பியுள்ளார் ரஜினி.
மும்பையில் ‘தர்பார்’ படப்பிடிப்பு முடிந்த பிறகு, நடிகர் ரஜினிகாந்த் ஓய்வுக்காக லண்டன் செல்ல திட்டமிட்டார். விமான டிக்கெட்டும் பதிவு செய்யப்பட்ட நிலையில், திடீரென லண்டன் பயணத்தை ரத்து செய்துவிட்டு, ஆன்மிகப் பயணமாக இமயமலை சென்றார். அவருடன் மூத்த மகள் ஐஸ்வர்யா தனுஷும் கடந்த 13-ம் தேதி சென்னையிலிருந்து விமானத்தில் புறப்பட்டு உத்தராகண்ட் மாநிலம் டேராடூன் சென்றார்.
அங்கு ரிஷிகேஷ், கேதார்நாத், பத்ரிநாத், பாபாஜி குகை, துவாராஹாட்டில் ரஜினி கட்டியுள்ள ‘குருசரண்’ ஆசிரமம் ஆகிய இடங்களுக்கு சென்ற ரஜினி 6 நாள் இமயமலைப் பயணத்தை முடித்துக்கொண்டு நேற்று (அக்டோபர் 18) இரவு சென்னை திரும்பினார். தனது இமயமலைப் பயணம் நல்லபடியாக அமைந்ததாகத் தெரிவித்துள்ளார்.
மேலும், நேற்று (அக்டோபர் 18) சென்னை விமான நிலையத்துக்கு ரஜினி வந்த போது ரசிகர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. அனைத்தையும் சிரிப்புடனே எதிர்கொண்ட ரஜினி, காரில் ஏறி வீட்டிற்குப் புறப்பட்டார். அப்போது அவருடைய காரைத் துரத்திக் கொண்டே ரசிகர்கள் சிலர் சென்றுள்ளனர்.
இதனைத் தொடர்ச்சியாக ரஜினி கவனித்துள்ளார். இரவு 12:30 மணியளவில் போயஸ் கார்டன் வீட்டை அடைந்துள்ளார். அப்போது பின்னால் வந்த ரசிகர்களை வீட்டிற்குள் அழைத்துள்ளார். அனைவரிடமும் வாழ்க்கை ரொம்ப முக்கியம், இப்படியெல்லாம் துரத்திக் கொண்டே வரக் கூடாது எனச் செல்லமாகக் கடிந்து கொண்டார். பின்பு அனைவருடனும் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
இந்த நிகழ்வு தொடர்பாக ரஜினி ரசிகர் ஒருவர் தனது ட்விட்டர் பதிவில், "கடவுளே என்னைக் கட்டி அணைத்தபொழுது.... என்றும் உங்கள் அன்பிற்கு அடிமை என் தலைவா. என்ன சொல்றது அவ்வளவு கூட்டம். அவரால் நகரக் கூட முடியவில்லை. ஆனால், அந்த தருணத்திலும் ஒரு நிமிடம் கூட அவருடைய முகத்திலிருந்த சிரிப்பு அகலவில்லை.
தன்னைச் சுற்றியுள்ள ஒவ்வொருவரும் எந்தளவுக்குத் தன்னை நேசிக்கிறார்கள் என்பதைக் கவனித்தார். அதனைத் தொடர்ந்து அவர் பின்னால் பயணித்தோம். எங்களை அங்கீகரித்தார். அதைத் தாண்டி ஒரு படி மேலே போய், எங்களை வீட்டிற்குள் அழைத்தார். அப்போது நேரம் அதிகாலை 12:38 மணி.
யாருங்க பண்ணுவா?. எங்கள் அனைவருடனும் சிரித்த முகத்துடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார். எப்போதுமே பாசிட்டிவாக இருப்பவர் என் தலைவன். தெய்வப்பிறவி என் தலைவன். அவர் 100 ஆண்டுகள் வாழ வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.
'தர்பார்' படத்தின் பணிகளை முடித்துக் கொடுத்துவிட்டு, சிவா இயக்கத்தில் உருவாகும் படத்தில் கவனம் செலுத்தவுள்ளார் ரஜினி. இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.