

கண்ணன் இயக்கத்தில் சந்தானம் நடித்து வரும் படத்தில் இரண்டு நாயகிகள் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார்கள்.
'ஏ1' படத்துக்குப் பிறகு 'டகால்டி', 'டிக்கிலோனா', 'தில்லுக்கு துட்டு 3', 'கண்ணன் இயக்கி வரும் படம்' ஆகியவற்றில் கவனம் செலுத்தி வருகிறார் சந்தானம். இதில் கண்ணன் இயக்கத்தில் உருவாகும் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது.
மசாலா பிக்ஸ் நிறுவனம் மூலம் கண்ணனே தயாரித்து வரும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளிலும் சுமார் 45 நாட்கள் நடைபெறவுள்ளது. இதன் கதைக்களத்துக்காக, சிலம்பமும் கற்றுள்ளார் சந்தானம்.
தற்போது இந்தப் படத்தின் நாயகிகளாக தாரா அலிஷா பெர்ரி மற்றும் ஸ்வாதி முப்பலா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். இதில் சந்தானத்துடன் 'ஏ1' படத்தில் நடித்தவர் தாரா அலிஷா பெர்ரி என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு உள்ளிட்ட பணிகளை முடித்து அடுத்த ஆண்டு பிப்ரவரியில் படத்தை வெளியிட முடிவு செய்துள்ளனர்.
இந்தப் படத்துக்கு முன்பாக அதர்வா, அனுபமா பரமேஷ்வரன் நடிக்க, கண்ணன் இயக்கி வரும் படம் டிசம்பரில் வெளியாகவுள்ளது. அடுத்தகட்டப் படப்பிடிப்புக்கு ரஷ்யாவுக்குச் செல்ல படக்குழு ஆயத்தமாகி வருகிறது.