

ராதாமோகன் இயக்கிவரும் படத்தில், எஸ்.ஜே.சூர்யா ஜோடியாக சாந்தினி நடித்து வருகிறார்.
‘மான்ஸ்டர்’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ராதாமோகன் இயக்கத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார் எஸ்.ஜே.சூர்யா. அத்துடன், நீண்ட வருடங்களுக்குப் பிறகு இந்தப் படத்தின் மூலம் தயாரிப்பாளராகவும் மாறியுள்ளார். ‘நியூ’, ‘அன்பே ஆருயிரே’ மற்றும் ‘இசை’ என இதுவரை 3 படங்களை மட்டுமே தயாரித்துள்ள எஸ்.ஜே.சூர்யாவின் நான்காவது தயாரிப்பு இது.
இந்தப் படத்தில், ஹீரோயினாக ப்ரியா பவானி சங்கர் ஹீரோயினாக நடிக்கிறார். ‘மான்ஸ்டர்’ படத்தைத் தொடர்ந்து மறுபடியும் இந்த ஜோடி இணைந்துள்ளது. இதன் படப்பிடிப்பு, கடந்த 9-ம் தேதி தொடங்கியது.
இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளராக ரிச்சர்ட் எம் நாதன், இசையமைப்பாளராக யுவன் ஷங்கர் ராஜா, எடிட்டராக ஆண்டனி ஆகியோர் பணியாற்றுகின்றனர். காதல் கலந்த த்ரில்லராக உருவாகும் இந்தப் படம், அடுத்த வருடம் (2020) காதலர் தினத்துக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்தப் படத்தில் இன்னொரு ஹீரோயினாக சாந்தினி நடித்து வருகிறார். ஒரேகட்டமாக படப்பிடிப்பை முடிக்கத் திட்டமிட்டுள்ளனர்.
இந்தப் படத்துக்கு ‘பொம்மை’ எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. 1964-ம் ஆண்டு பாலசந்தர் இயக்கத்தில் வெளியான படம் ‘பொம்மை’. எனவே, தலைப்பு உரிமைக்கான பேச்சுவார்த்தை தற்போது நடைபெற்று வருகிறது. அது முடிந்ததும் அதிகாரபூர்வமாக தலைப்பு அறிவிக்கப்படும்.