

தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினர்கள் 2500 பேருக்கும், ஐசரி கணேஷ் தீபாவளிப் பரிசு அளித்துள்ளார்.
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தேர்தல் கடந்த ஜூன் 23-ம் தேதி நடைபெற்றது. இதில், விஷால் தலைமையிலான பாண்டவர் அணியும், கே.பாக்யராஜ் தலைமையிலான சங்கரதாஸ் சுவாமிகள் அணியும் போட்டியிட்டன. ஓய்வுபெற்ற நீதிபதி பத்மநாபன், தேர்தல் அதிகாரியாகச் செயல்பட்டார்.
இந்தத் தேர்தலில் பல குளறுபடிகள் ஏற்பட்டன. தேர்தல் நாளன்று பாதுகாப்பு அளிக்க முடியாது எனக் காவல்துறை மறுத்தது. எனவே, பாண்டவர் அணி நீதிமன்றம் சென்று, காவல்துறை பாதுகாப்பைப் பெற்றது. அதேபோல், தேர்தல் நடைபெற இருந்த இடமும் மாற்றப்பட்டது.
இதற்கிடையில், வாக்காளர் பட்டியலில் குளறுபடி இருப்பதால், தேர்தலை ரத்து செய்து மாவட்ட சங்கங்களின் பதிவாளர் உத்தரவிட்டார். இதற்கும் நீதிமன்றம் சென்று தடை பெற்று, தேர்தலை நடத்த அனுமதி வாங்கியது பாண்டவர் அணி. ஆனால், தேர்தல் மட்டுமே நடத்த அனுமதி அளித்த நீதிமன்றம், வாக்கு எண்ணிக்கைக்கு இதுவரை அனுமதி அளிக்கவில்லை.
எனவே, கடந்த 3 மாதங்களுக்கும் மேலாக இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. நேற்று (அக்டோபர் 18) இந்த வழக்கில் தீர்ப்பு அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், வருகிற 24-ம் தேதிக்கு தீர்ப்பை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இவ்வளவு குளறுபடிகள் இருப்பதால், நடிகர் சங்க உறுப்பினர்கள் கவலையில் உள்ளனர். தங்களுக்குத் தேவையான விஷயங்களை நடிகர் சங்கம் மூலம் பெறமுடியாமல் அவதிக்கு ஆளாகியுள்ளனர். குறிப்பாக, தீபாவளி, பொங்கல் பண்டிகையின்போது நடிகர் சங்கம் சார்பில் உறுப்பினர்களுக்கு வேட்டி, சேலை, இனிப்புகள் உள்ளிட்டவை வழங்கப்படும். ஆனால், தற்போது நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருவதால், இந்த வருடம் தீபாவளிப் பரிசு கிடைக்குமா? என்ற சந்தேகத்தில் நடிகர் சங்க உறுப்பினர்கள் இருந்தனர்.
இந்நிலையில், நடிகர் சங்க உறுப்பினரும், பொதுச் செயலாளர் பதவிக்குப் போட்டியிட்டவருமான ஐசரி கணேஷ், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினர்கள் 2500 பேருக்கும் தீபாவளிப் பரிசு வழங்கியுள்ளார். வேட்டி, சேலை, இனிப்புகள் இதில் இடம்பெற்றுள்ளன.
விஷாலுக்கு எதிராக சங்கரதாஸ் சுவாமிகள் அணியை ஒருங்கிணைத்தவர் ஐசரி கணேஷ். அவர் தீபாவளிப் பரிசு கொடுத்திருப்பதால், அவருக்குப் போட்டியாக விஷால் அணியினர் என்ன செய்யப் போகின்றனர் எனத் தெரியவில்லை.