

'இந்தியன் 2' படத்துக்காக ரூ.40 கோடியில் பிரம்மாண்ட சண்டைக் காட்சியொன்றை உருவாக்க இயக்குநர் ஷங்கர் திட்டமிட்டுள்ளார்.
ஷங்கர் இயக்கத்தில் கமல், காஜல் அகர்வால், சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், ப்ரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் 'இந்தியன் 2'. இந்தப் படத்தின் பூஜைக்குப் பிறகு சில சிக்கல்கள் நிலவின. தற்போது அனைத்தும் தீர்க்கப்பட்டு படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வருகிறது.
மயிலாப்பூர், ஸ்ரீபெரும்புதூர், சாலிகிராமம் உள்ளிட்ட இடங்களில் சில முக்கிய காட்சிகளைக் காட்சிப்படுத்தியுள்ளனர். அதனைத் தொடர்ந்து ராஜமுந்திரியில் உள்ள சிறையிலும் சில காட்சிகளைப் படமாக்கினார் ஷங்கர்.
தற்போது இந்தப் படத்தின் மிக முக்கியமான சண்டைக் காட்சி ஒன்றை போபாலில் படமாக்கத் திட்டமிட்டுள்ளார் ஷங்கர். இதற்காக மட்டும் சுமார் ரூ.40 கோடி வரை செலவு செய்யத் தயாரிப்பு நிறுவனம் முன்வந்துள்ளது. பீட்டர் ஹெய்ன் இந்தச் சண்டைக் காட்சியை வடிவமைக்கவுள்ளார்.
'இந்தியன்' படத்தில் 70 வயது நிரம்பியவராக கமல் நடித்திருந்தார். இந்தப் படத்தில் 90 வயது நிரம்பியவராக கமல் நடிப்பதால், சண்டைக் காட்சிகளுக்கு அந்த வயதைக் கணக்கில் கொண்டு வடிவமைத்து வருவதாக பீட்டர் ஹெய்ன் அளித்த பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார்.
அனிருத் இசையமைத்து வரும் இந்தப் படத்துக்கு, ரத்னவேல் ஒளிப்பதிவு செய்து வருகிறார். லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது. 2021-ல் தான் இந்தப் படம் வெளியாகும் எனத் தெரிகிறது.