

'லாபம்' படப்பிடிப்பின்போது, விவசாயிகளுக்காகக் கட்டிடம் கட்டிக் கொடுத்துள்ளார் விஜய் சேதுபதி.
எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, ஸ்ருதி ஹாசன், கலையரசன், ஜெகபதி பாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் 'லாபம்'. இந்தப் படத்தை விஜய் சேதுபதி மற்றும் ஆறுமுக குமார் இணைந்து தயாரித்து வருகிறார்கள். தற்போது சென்னைக்கு வெளியே ஒரு கிராமத்தில் இந்தப் படத்தின் முக்கியக் காட்சிகளைப் படமாக்கி வருகிறது படக்குழு.
இதில் ஒரு முக்கியமான காட்சிக்காக விவசாயிகள் சங்கக் கட்டிடம் தேவைப்பட்டுள்ளது. இதற்காக செட் போடலாம் என்று பேசிக் கொண்டிருந்தபோது, ''செட் எல்லாம் வேண்டாம். உண்மையான கட்டிடத்தையே உருவாக்கிவிடுங்கள். அதற்கான முழு செலவையும் நான் ஏற்கிறேன்'' என்று சொல்லியிருக்கிறார் விஜய் சேதுபதி. பின்பு, அதை உருவாக்கி அதில் முக்கியக் காட்சிகளைப் படமாக்கியுள்ளனர்.
அனைத்துக் காட்சிகளும் படமாக்கி முடிந்தவுடன், அந்தக் கட்டிடத்தை ஊர் மக்களுக்கே கொடுக்கச் சொல்லிவிட்டார் விஜய் சேதுபதி. ஊர் மக்களும் பெரும் மகிழ்ச்சியுடன் பெற்றுக் கொண்டனர். இந்தச் சம்பவம் தொடர்பாக இயக்குநர் ஜனநாதன், "என் படத்தின் தலைப்பு 'லாபம்' என்றதும் பலரும் ஆச்சரியமாகக் கேட்கிறார்கள். இந்தப் படம் யாருக்கு லாபம் என்பதையும் எது லாபம் என்பதையும் பேசும்.
இந்தியாவின் மிகப்பெரிய பொருளாதாரமே விவசாய உற்பத்திதான். நம்மிடம் இருந்த விவசாய நிலங்களும் அதில் விளைந்த விளைச்சலும்தான் ஆங்கிலேயரின் கண்களை உறுத்தியது. நமது விவசாய நிலங்களையும் அதன் மூலமாக வந்த வளங்களையும் கொள்ளையடிக்கத்தான் ஆங்கிலேயர்கள் இங்கே 300 வருடமாக இங்கிருந்தார்கள். விவசாயத்தில் மிகப்பெரிய வளர்ச்சி கொண்ட நம்நாடு ஏன் இப்போது நலிவைச் சந்தித்தது? தினமும் விவசாயிகள் தற்கொலை என்ற செய்திகள் வருவது எதனால்? என்பதை என்னுடைய பாணியில் இந்தப் படத்தில் சொல்லியிருக்கிறேன். இன்று விவசாயிகளுக்கு இருக்கும் பிரச்சினை சர்வதேசப் பிரச்சினை. அதைப் படம் விரிவாகப் பேசும்” என்று தெரிவித்துள்ளார்.
இமான் இசையமைத்து வரும் இந்தப் படத்துக்கு ராம்ஜி ஒளிப்பதிவு செய்து வருகிறார். இறுதிக்கட்டப் படப்பிடிப்பு விரைவில் தொடங்கி நடைபெறவுள்ளது.