

மகராசன் மோகன்
சென்னை
இமயமலைக்கு ஆன்மிகப் பயணம் சென்றுள்ள ரஜினிகாந்த், பாபாஜி குகையில் நேற்று தியானம் செய்தார். தனது 5 நாள் பயணத்தை முடித்துக்கொண்டு அவர் இன்று சென்னை திரும்புகிறார். கடந்த சில மாதங்களாக மும்பையில் நடந்து வந்த ‘தர்பார்’ படத்தின் படப்பிடிப்பை முடித்துக்கொண்டு சென்னை திரும்பிய ரஜினி, சில நாட்கள் ஓய்வுக்கு பிறகு கடந்த 13-ம் தேதி இமயமலைக்கு புறப்பட்டார்.
இமயமலைக்கு செல்லும்போது பெரும் பாலும் குடும்பத்தினரை தவிர்த்து தனியா கவே செல்ல விரும்பும் ரஜினிகாந்த் இந்த முறை தனது மூத்த மகள் ஐஸ்வர்யா தனுஷை யும் உடன் அழைத்துச் சென்றார். சென்னையில் இருந்து விமானத்தில் உத்தராகண்ட் மாநிலம் டேராடூன் சென்ற அவர், அங்கிருந்து காரில் ரிஷிகேஷ் சென் றார். அங்கு சுவாமி தரிசனம் செய்து, கங்கா ஆரத்தியிலும் கலந்துகொண்டார். அங்கு சுவாமி தயானந்த சரஸ்வதி ஆசிரமத்தில் தங்கி, சுவாமிகளின் சமாதியில் தியானம் செய்தார்.
தொடர்ந்து ஹெலிகாப்டரில் கேதார்நாத் மற்றும் பத்ரிநாத் சென்று, சுவாமி தரிசனம் செய்தார்.ஒவ்வொரு முறை படப்பிடிப்புக்குப் பிறகும் வெளிநாடு அல்லது இமயமலை பயணம் மேற்கொள்வது ரஜினியின் வழக்கம். இந்த முறை ‘தர்பார்’ படப்பிடிப்பு முடிந்த பிறகு, லண்டன் செல்லவே முதலில் திட்டமிட்டிருந்தார். அதற்கான விமான டிக்கெட்டும் பெறப்பட்ட நிலையில், கடைசி நேரத்தில் லண்டன் பயணத்தை ரத்து செய்துவிட்டு, இமயமலை செல்ல முடிவு செய்தது குறிப்பிடத்தக்கது. பயண ஏற்பாடுகளை அவரது நீண்ட கால நண்பர் ஹரி செய்திருந்தார்.
திடீர் பயணமாக இருந்தாலும் ரிஷிகேஷ், கேதார்நாத் பகுதிகளில் உள்ள கோயில்கள், ஆசிரமங்களில் ரஜினிகாந்துக்கு மடாதிபதி கள், ஆசிரம நிர்வாகிகள், ரசிகர்கள் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ஆன்மிக சம்பந்தமான சுற்றுப்பயணங்கள் மேற்கொள்ளும்போது, அரசியல், சினிமா விஷயங்களை அதில் கலக்காமல் பார்த்துக் கொள்வார் ரஜினி. இந்த முறையும் அப்படியே அமைந்துள்ளது. உடன் வந்தவர் களிடம்கூட ஆன்மிகம், தியானம் தவிர வேறு எதைப் பற்றியும் ரஜினி பேசவில்லை என்று நண்பர்கள் கூறுகின்றனர்.
மஹா அவதார் பாபாஜியின் குகை, உத்தராகண்ட் மாநிலம் துனாகிரி பகுதியில் உள்ளது. பாபாஜியை ரஜினி தனது மானசீக குருவாக கருதுவதால், ஒவ்வொரு முறை இமயமலை செல்லும்போதும், இந்த குகைக்கு சென்று தியானம் செய்வது வழக்கம். பாபாஜி குகைக்கு சென்று வரும் பக்தர்களின் வசதிக்காக, அருகே உள்ள துவாராஹாட் என்ற இடத்தில் ‘குரு சரண்’ என்ற பெயரில் ரஜினி ஓர் ஆசிரமமும் கட்டியுள்ளார்.
இந்நிலையில், பத்ரிநாத் பயணத்தை முடித்துக்கொண்ட ரஜினி அங்கிருந்து துவாராஹாட் சென்றார். அங்குள்ள தனது குருசரண் ஆசிரமத்தில் சில மணி நேரம் தங்கி ஓய்வெடுத்தார். நேற்று பாபாஜி ஆசிரமத்துக்கு சென்றார். அங்கு தியானம், வழிபாடு மேற்கொண்ட பிறகு, சிறிது நேரம் ஓய்வெடுத்தார். உத்தராகண்டிலேயே நேற்று இரவு தங்கிய ரஜினி, தனது 5 நாள் இமயமலை பயணத்தை முடித்துக்கொண்டு, இன்று சென்னை திரும்புகிறார். விரைவில், ‘தர்பார்’ படத்தின் டப்பிங் வேலைகள் மற்றும் சிவா இயக்க உள்ள புதிய படத்தில் அவர் கவனம் செலுத்த உள்ளார்.
பயணம் ரொம்ப திருப்தி.. நண்பர்களிடம் ரஜினி நெகிழ்ச்சி
இமயமலை பயணத்தின்போது, மலைப் பகுதிகளில் நடைபயணம், தியானம், ஆன்மிக வழிபாடு என்று ரஜினி மிகவும் உற்சாகத்துடன் காணப்பட்டார். கடினமான மலைப் பகுதிகளில்கூட ஆங்காங்கே சற்று ஓய்வெடுத்துவிட்டு, நடைபயணத்தை தொடர்ந்தார்.
இதுகுறித்து அவரது நண்பர்கள் கூறியதாவது:
ரஜினி ஒவ்வொரு முறை இமயமலைக்கு வரும்போதும் உற்சாகம் அடைகிறார். இந்த உற்சாகமும், புத்துணர்ச்சியும் அவரை அடுத்த பல மாதங்களுக்கு இன்னும் உத்வேகத்துடன் செயல்பட வைக்கிறது. இந்த முறையும் அவர் மிகவும் உற்சாகத்துடன் இருந்தார். கேதார்நாத்துக்கு ஹெலிகாப்டர் பயணம், பத்ரிநாத்தில் இருந்து பாபாஜி குகைக்கு செல்லும் சில இடங்களில் நடை பயணம், மலையடிவாரத்தில் ஓய்வு, வழியில் டீக்கடை தென்பட்டால் உடனே நிறுத்தி நண்பர்களோடு அமர்ந்து டீ குடிப்பது என ஒவ்வொரு விஷயத்தையும் ரசித்து செய்தார்.
‘‘இயற்கையான சூழ்நிலையில தியானம், சுவாமி தரிசனம் என இந்த முறை பயணம் ரொம்ப திருப்தியா இருந்திச்சு’’ என்று ரஜினி மனப்பூர்வமாக சொல்லிக்கொண்டே இருந்தார்.
இவ்வாறு அவரது நண்பர்கள் தெரிவித்தனர்.