

கெளதம் மேனன் தொடர்பாக இணையத்தில் தொடர்ந்த கிண்டல்களுக்கு, இயக்குநர் அருண் வைத்தியநாதன் காட்டமாகப் பதிலளித்துள்ளார்.
தனுஷ், மேகா ஆகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'எனை நோக்கி பாயும் தோட்டா'. கெளதம் மேனன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படம் பைனான்ஸ் சிக்கிலில் சிக்கியுள்ளது. இதனால், பல முறை வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தற்போது நவம்பர் 15-ம் தேதி வெளியாகும் என்று கல்லூரி விழா ஒன்றில் கலந்து கொண்டபோது கெளதம் மேனன் தெரிவித்துள்ளார். இதனிடையே, புதிய படத்தின் போஸ்டர்கள், டீஸர், ட்ரெய்லர் என தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு வந்தார் கெளதம் மேனன்.
ஒவ்வொரு முறை தனது ட்விட்டர் பக்கத்தில் ஏதேனும் வெளியிடும்போது, தொடர்ச்சியாக 'எனை நோக்கி பாயும் தோட்டா' எப்போது வெளியீடு, 'துருவ நட்சத்திரம்' என்னாச்சு என்ற கேள்வியை நெட்டிசன்கள் எழுப்பிக் கொண்டே இருந்தார்கள்.
இன்று (அக்டோபர் 17) 'ஓ மை கடவுளே' படத்தின் டீஸரை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார் கெளதம் மேனன். அதற்கும் 'எனை நோக்கி பாயும் தோட்டா' எப்போது வெளியீடு என்றே நெட்டிசன்கள் கேள்வி எழுப்பினர்.
இவ்வாறு தொடர்ச்சியாக கெளதம் மேனனைக் கிண்டல் செய்தும், கேள்வி எழுப்பியும் வருவதற்கு இயக்குநர் அருண் வைத்தியநாதன் கடும் காட்டமாகப் பதிலளித்துள்ளார். இது குறித்து தனது ட்விட்டர் பதிவில், "கெளதம் மேனன் ஒரு படத்துக்குத் தனது வாழ்த்துகளைச் சொல்லும்போது, அவரது ரசிகர்கள், நடிகரின் ரசிகர்கள் என்று சொல்லிக்கொள்ளும் சிலர், உங்கள் படத்தை எப்போது வெளியிடுவீர்கள் என்று கேலி பேசுகின்றனர்.
உங்கள் ஆர்வத்தைப் பாராட்டும் அதே வேளையில் அவருக்கும் சற்று ஓய்வு கொடுங்கள். சம்பந்தப்பட்ட விஷயங்களுக்குத் தீர்வு கண்ட உடனேயே தனது படத்தை வெளியிட அவருக்கு விருப்பம் இருக்காது என்று நினைக்கிறீர்களா? உங்கள் உற்சாகத்தைக் கட்டுப்படுத்துங்கள்" என்று தெரிவித்துள்ளார் அருண் வைத்தியநாதன்.