

கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள 'கைதி' படத்தின் வெளியீட்டுத் தேதியை, படக்குழு அறிவித்துள்ளது.
'மாநகரம்' படத்துக்குப் பிறகு கார்த்தி நடிக்கும் படத்தை இயக்கத் தொடங்கினார் லோகேஷ் கனகராஜ். 'கைதி' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் நரேன், ஜார்ஜ் மரியான், ரமணா, தீனா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சாம் சி.எஸ். இசையமைக்க, சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
எஸ்.ஆர்.பிரபு தயாரித்துள்ள இந்தப் படத்தின் பணிகள் அனைத்துமே முடிக்கப்பட்டு, தணிக்கையும் செய்யப்பட்டுள்ளது. 'யு/ஏ' சான்றிதழ் கிடைத்ததைத் தொடர்ந்து, படத்தின் வெளியீட்டுத் தேதி எப்போது என்ற குழப்பம் நீடித்தது.
தீபாவளி வெளியீடு என்றாலும், அக்டோபர் 24, 25 அல்லது 27 ஆகிய மூன்றில் ஒரு தேதியை முடிவு செய்ய ஆலோசனை நடத்தினார்கள். இறுதியில், அக்டோபர் 25-ம் தேதியைத் தேர்வு செய்து அறிவித்துள்ளது படக்குழு. முதலில் அக்டோபர் 27-ம் தேதி தீபாவளி அன்று வெளியிடலாம் என்றுதான் முடிவு செய்தார்கள். ஆனால், அன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை என்பதால் அக்டோபர் 25-ம் தேதி வெள்ளிக்கிழமை அன்று படத்தை வெளியிடலாம் என்று முடிவு செய்து அறிவித்துவிட்டார்கள்.
இந்தப் படத்தில் நாயகி, பாடல்கள் என எதுவுமே கிடையாது என்றும், படம் தொடங்கி, முடியும் வரை முழுக்கவே சண்டைக் காட்சிகள் நிறைந்ததாகவே இருக்கும் எனவும் படக்குழு அறிவித்துள்ளது. சமீபத்தில் வெளியிடப்பட்ட இந்தப் படத்தின் ட்ரெய்லருக்கு இணையத்தில் பெரும் வரவேற்பு கிடைத்தது குறிப்பிடத்தக்கது.