

மீ டூ புகார் அளித்த பெண்களுக்கு வாய்ப்பு கிடைக்காமல் போவது வருத்தமானது என்று தமன்னா தெரிவித்துள்ளார்.
ஹாலிவுட்டில் ஆரம்பிக்கப்பட்ட மீ டூ ஹேஷ்டேக் இந்தியாவில் தொடர்ந்தது. இதில் பல்வேறு திரையுலகப் பிரபலங்கள் மீது குற்றச்சாட்டு பதியப்பட்டது. இதில் கவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி கூறிய புகார் பெரும் சர்ச்சையானது. அதனைத் தொடர்ந்து இயக்குநர் சுசி கணேசன், நடிகர் அர்ஜுன் ஆகியோர் மீது மீ டூ புகார்கள் வந்தன. இந்த விவகாரம் தொடர்ச்சியாக விவாதிக்கப்பட்டு வருகிறது.
திரையுலகில் தொடர்ச்சியாக நடித்து வரும் தமன்னா, 'மீ டூ' புகார்கள் குறித்த கேள்விக்குப் பதிலளித்துள்ளார். இது தொடர்பாக 'தி இந்து' ஆங்கில நாளிதழுக்கு அளித்துள்ள பேட்டியில், "என் இயல்பின் காரணமாக வேலை செய்யும் இடத்தில் பாலியல் துன்புறுத்தலை நான் இதுவரை எதிர்கொண்டதில்லை. நான் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பது எனக்குத் தெரியும். அப்படி ஒரு அனுபவம் இல்லாமல் போனது எனது அதிர்ஷ்டமாகவும் இருக்கலாம். ஆனால் பாலியல் துன்புறுத்தலை எதிர்கொண்ட பெண்கள் துணிச்சலாகப் பேசியது நல்லது. ஆனால் அவர்களுக்கு வாய்ப்பு கிடைக்காமல் போவது வருத்தமானது.
ஏதோ ஒரு விஷயம் உங்களைப் பாதிக்கிறது என்று நீங்கள் நினைத்தால், எதிர்த்துப் போராட வேண்டும். நான் உட்கார்ந்து வருத்தப்படுபவள் அல்ல. நான் இவ்வளவு நாட்கள் தாக்குப்பிடிக்கக் காரணம், என்னால் நான் நினைத்தபடி விஷயங்களைச் செய்ய முடிந்ததுதான். பல வலிமையான, சுயமாகத் துணிந்து நிற்கும் பெண்கள் இருக்கிறார்கள்" என்று தெரிவித்துள்ளார் தமன்னா.
தமிழில் 'பெட்ரோமாக்ஸ்' படத்தைத் தொடர்ந்து விஷாலுடன் 'ஆக்ஷன்' படத்தில் நடித்துள்ளார் தமன்னா. இந்தப் படம் நவம்பர் மாதம் திரைக்கு வரவுள்ளது.