

இயக்குநர் விஜய் நடிகை அமலா பால் திருமணம் சென்னையில் ஜூன் 12-ம் தேதி நடக்கவுள்ள நிலையில், இரு வீட்டாரும் திருமண அழைப்பிதழ் கொடுப்பதில் தீவிரமாக உள்ளனர்.
‘கிரீடம்’, ‘தெய்வத்திருமகள்’, ‘தலைவா’ உள்ளிட்ட படங்களை இயக்கியவர் விஜய். அவருக்கும் நடிகை அமலா பாலுக்கும் காதல் ஏற்பட்டது. இதுகுறித்த தகவல் வெளியானதும் இருவரும் மறுப்பு தெரிவிக்காமல் ஒப்புக்கொண்டனர். இரு வீட்டார் சம்மதத்துடனும் திருமண ஏற்பாடுகள் முழு வீச்சில் நடந்துவருகிறது. கேரள மாநிலம் கொச்சியில் நிச்சயதார்த்தம் ஜூன் 7-ம் தேதி நடக்கவுள்ளது. சென்னையில் திருமணம் ஜூன் 12-ம் தேதி நடக்கவுள்ளது.
இதற்கிடையில் ‘சைவம்’ படத்தை வெளியிடும் வேலையில் இயக்குநர் விஜய்யும், ஒப்புக்கொண்ட தமிழ், மலையாளப் படங்களை விரைவாக நடித்துக்கொடுக்கும் பணியில் அமலா பாலும் தீவிரமாக இருக்கிறார்கள். உற்றார், உறவினர்கள், நண்பர்களுக்கு திருமண அழைப்பிதழ் கொடுக்கும் வேலை இரு வீட்டிலும் பரபரப்பாக நடந்துவருகிறது.