

நாங்கள் எப்போதுமே பெயரற்றவர்கள், முகமற்றவர்கள் என்று 'பிகில்' தயாரிப்பாளர் வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார்.
அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் 'பிகில்'. தணிக்கை அதிகாரிகள் இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு 'யு/ஏ' சான்றிதழ் கொடுத்துள்ளனர். தற்போது படத்தின் வெளியீட்டுத் தேதியை இறுதி செய்யும் ஆலோசனை நடைபெற்று வருகிறது.
ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தின் ட்ரெய்லர், சில நாட்களுக்கு முன்பு இணையத்தில் வெளியானது. யூ டியூப் பக்கத்தில் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தி வருகிறது. இந்திய அளவில் அதிக லைக்ஸ் பெற்ற ட்ரெய்லர் என்ற இமாலய சாதனையை விரைவில் 'பிகில்' ட்ரெய்லர் நிகழ்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தச் சாதனைகள் குறித்து, சமூக வலைதளத்தில் பகிரும்போது அனைவருமே அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம், விஜய் படத்தின் ட்ரெய்லர் சாதனை உள்ளிட்ட வார்த்தைகளையே தெரிவித்துள்ளனர். பலரும் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பு என்று குறிப்பிடவில்லை.
இது தொடர்பாக 'பிகில்' படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான அர்ச்சனா கல்பாத்தி தனது ட்விட்டர் பதிவில், "ஏஜிஎஸ் நிறுவனத்தின் 'பிகில்' படத்தின் சாதனைகளைப் பாராட்டியதற்கு நன்றி. நான் அளித்த பல பேட்டிகளில் குறிப்பிட்டுள்ளதைப் போலத் தயாரிப்பாளர்கள் எப்போதுமே பெயரற்றவர்களாகவும், முகமற்றவர்களாகவுமே இருக்கிறார்கள்" என்று தன் வேதனையைத் தெரிவித்துள்ளார்.