

தனது ஓவியங்கள் மூலம் பலரது கவனத்தை ஈர்த்து வந்த ஸ்ரீதர், தற்போது ‘மய்யம்’ என்ற படத்தை தயாரித்துள்ளார். இப்படத்துக்கு கதை, திரைக்கதையும் எழுதியுள்ளார். சினிமா உலகில் முதல் முறையாக தடம் பதிக்கும் ஸ்ரீதரிடம் அவரது திரையுலக அனுபவங்கள் பற்றி கேட்டோம்.
திரைப்படம் தயாரிக்கும் ஆர்வம் உங்களுக்கு எப்படி வந்தது?
தயாரிப்பாளராக வேண்டும் என்பது எனது நீண்ட நாள் ஆசை. ஒரு நாள் கே.பால சந்தரிடம் எனது ஆசையைச் சொன்னேன். அதற்கு அவர், “நல்லா பண்ணுடா.. அதுக்கு முன்னாடி நிறைய ஹோம் ஒர்க் பண்ணிட்டு பண்ணு” என்று அறிவுரை கூறினார். என்னு டைய ஸ்கெட்ச் புக் தயாரிப்பு நிறுவனத்தை கே.பி. சார்தான் தொடங்கி வைத்தார். என் முதல் படத்தின் குழு மிகவும் வித்தியாசமாக இருக்க வேண்டும் என்று விரும்பினேன். அதைத்தொடர்ந்து மாணவர்களைக் கொண்ட ஒரு குழுவை உருவாக்கி ‘மய்யம்’ படத்தை தொடங்கினேன்.
மாணவர்களை முழுமையாகக் கொண்ட ஒரு படக்குழு எப்படி சாத்தியமானது?
மாணவர்களால் தினமும் படப்பிடிப்புக்கு வந்து பணியாற்ற முடியாது. டிசம்பர் மாதம் முழுவதும் அவர்களுக்கு விடுமுறை இருந்தது. அதனால் நவம்பர் மாதம் பின்னி மில்லில் செட் போட ஆரம்பித்து, மாணவர்களுக்கு விடுமுறை விடுவதற்கு முன்தினம் படப்பிடிப்பை தொடங்கினோம். டிசம்பர் 30-ம் தேதிக்குள் மொத்த படப் பிடிப்பையும் முடித்துவிட்டோம். படப் பிடிப்பை முடித்த பிறகு எடிட்டர் கார்த்திக், உதயகுமார், சேது ஆகியோர் இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகளை முடிக்க எனக்கு உதவியாக இருந்தார்கள்.
கமல் நடத்திய பத்திரிகையின் பெயர் ‘மய்யம்’. இந்த தலைப்பை பயன்படுத்த அவரிடம் அனுமதி வாங்கி விட்டீர்களா?
புயல் ஒரு இடத்தில் மய்யம் கொண்டிருக் கிறது என்று சொல்வார்கள் இல்லையா, அதற்காகத்தான் ‘மய்யம்’ என்று தலைப்பு வைத்தேன். இதை கமல் சாரிடம் சொல்லி விட்டுதான் வைத்தேன். இப்படத்தைப் பற்றி என்னிடம் விசாரித்த அவர், “நல்லா பண்ணுங்க” என்று வாழ்த்தினார்.
ஒரு ஓவியராக நீங்கள் பெரியளவில் பெயர் பெற்று விட்டீர்கள். அப்படி இருக்கும்போது எதற்காக இந்த சினிமா ஆசை?
திறமையான பல கலைஞர்களை சினிமாவில் அறிமுகப்படுத்த வேண்டும் என்பது என் ஆசை. அதை நிறைவேற்றத்தான் படம் எடுக்கிறேன். நான் அறிமுகப்படுத்தும் இந்தக் குழுவினர் பல ஆண்டுகள் தமிழ் திரையுலகில் வலம் வருவார்கள் என்று நம்புகிறேன். மேலும் ஒரு ஓவியரைப் பற்றி கதை பண்ண வேண்டும் என்ற ஆசையும் எனக்கு இருக்கிறது. அதற்காக பல விஷயங்களை சேகரித்து வைத்துள்ளேன்.
‘மய்யம்’ படம் முழுக்க ரோபோ ஷங்கர் சுவரைப் பார்த்தே பேசுகிறாராமே?
ஆமாம். 45 நிமிடங்கள் ஒருவர் சிறிய அறை ஒன்றில் தனியாக மாட்டினால் எப்படியிருக்கும், அதை தான் ரோபோ ஷங்கர் பண்ணியிருக்கிறார்.
உங்களுக்கும் கமலுக்கு இடையே இருக்கும் நட்பைப் பற்றி சொல்லுங்கள்...
என்னுடைய முதல் ஓவியக் கண்காட்சியை கமல் சார் திறந்து வைக்க வேண்டும் என்று விரும்பினேன். ஆனால் அந்த ஆசை என்னுடைய 54-வது கண்காட்சியில்தான் பலித்தது. 13 வருடங்கள் தொடர்ச்சியாக என்னுடைய படைப்புகள் அனைத்தையும் கமல் சாரிடம் காட்டியிருக்கிறேன். ஒவ்வொரு கட்டத்திலும் அவர் என்னை ஊக்கப்படுத்தியுள்ளார்.
கடந்த ஆண்டு நடந்த 1980களின் நடிகர்கள் சந்திப்புக்கு நீங்கள்தான் ஓவியம் வரைந்தீர் கள். அந்த அனுபவம் எப்படி இருந்தது?
நடிகர் மோகன்லாலின் ஈ.சி.ஆர் வீட்டுக்கு நான்தான் ஓவியங்கள் வரைந்தேன். 80-களின் நடிகர்கள் சந்திப்பு பற்றி அவர் என்னிடம் கூறினார். அப்போது விருது வழங்கும் நிகழ்ச்சிக்கு செய்தது போன்று வித்தியாசமாக ஏதாவது செய்து தருகிறேன் என்று லால் சாரிடம் நான் கூறினேன். கோவா பார்ட்டி தீமில் அந்த சந்திப்பு நிகழ்ச்சியை நடத்தப் போவதாக அவர் கூறினார்.
உடனே அந்த தீமில் நடிகர் நடிகைகள் இப்படித் தான் இருப்பார்கள் என்று கற்பனை செய்து வரைந்து கொடுத்தேன். சந்திப்பு நிகழ்ச்சிக்கு வந்த ஒவ்வொரு நடிகர், நடிகைக்கும் என்னுடைய ஓவியத்தை மோகன்லால் பரிசளித்தார். அனைவருக்கும் அது இன்ப அதிர்ச்சியாக இருந்தது. அவர்கள் அனைவரின் வீட்டிலும் நான் வரைந்த ஓவியம் இருக்கிறது என்பதை நினைக்கும்போது சந்தோஷமாக இருக்கிறது.
தொடர்ச்சியாக எந்த மாதிரியான படங்களைத் தயாரிக்க திட்டமிட்டிருக்கிறீர்கள்?
என் அடுத்த படத்திலும் ஒரு புது இயக்குநரைத்தான் அறிமுகப்படுத்தப் போகிறேன். முதலில் 3, 4 படங்களில் நிறைய புதுமுகங்களை அறிமுகப்படுத்த இருக்கிறேன். அதன் மூலம் தயாரிப்பைப் பற்றி முழுமையாக தெரிந்துகொண்டு அதன் பிறகு பெரிய நடிகர்கள், இயக்குநர்களை வைத்து வித்தியாசமான படங்களை எடுப்பேன்.