கேதார்நாத் கோயிலில் மகளுடன் சுவாமி தரிசனம்: இமயமலையில் ரஜினிகாந்த்

கேதார்நாத் மலைப் பகுதியில் நண்பர் ஹரியுடன்..
கேதார்நாத் மலைப் பகுதியில் நண்பர் ஹரியுடன்..
Updated on
1 min read

மகராசன் மோகன்

சென்னை

ஆன்மிகப் பயணமாக இமயமலை சென்றுள்ள ரஜினிகாந்த், கேதார்நாத் கோயிலில் மகள் ஐஸ்வர்யாவுடன் சுவாமி தரிசனம் செய்தார். இன்று அவர் பத்ரிநாத் செல்ல உள்ளார்.

‘தர்பார்’ படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்த ரஜினிகாந்த் 10 நாள் ஆன்மிகப் பயணமாக இமயமலை செல்ல திட்டமிட்டார். சென்னையில் இருந்து கடந்த 13-ம் தேதி காலை விமானத்தில் புறப்பட்டு உத்தராகண்ட் மாநிலம் டேராடூன் சென்றார். அவரது மூத்த
மகள் ஐஸ்வர்யா தனுஷும் உடன் சென்றுள்ளார்.

டேராடூனில் இருந்து காரில் ரிஷிகேஷ் சென்ற ரஜினி, அங்கு சுவாமி தரிசனம் செய்தார். கங்கா ஆரத்தியிலும் கலந்துகொண்டார். பிறகு, தனது குருவான தயானந்த சரஸ்வதி சுவாமிகளின் ஆசிரமத்துக்கு சென்று, அவரது சமாதியில் தியானம் செய்தார். ஆசிரமத்தி
லேயே இரவு தங்கினார். ‘‘வழக்கம்போல, மிகுந்த பக்தி சிரத்தையோடு ஆசிரமத்துக்கு வந்துள்ளார் ரஜினி. வழக்கமாக தங்கும் அறையில் தங்கினார். ஆசிரம உணவையே சாப்பிடுகிறார். ஆசிரம செயல்பாடுகளை ஆர்வத்தோடு கேட்டு தெரிந்துகொண்டார்’’ என்று ஆசிரம ஊழியர்கள் கூறினர்.

இந்நிலையில், ரிஷிகேஷில் இருந்து ரஜினி நேற்று ஹெலிகாப்டரில் புறப்பட்டு கேதார்நாத் சென்றார். அங்கு அவருக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர், கேதார்நாத் சிவன் கோயிலில் மகள் ஐஸ்வர்யாவுடன் சுவாமி தரிசனம் செய்தார்.

நடைபயிற்சி, யோகா, தியானம்

இந்த முறை ரஜினியின் இமயமலைப் பயணம் முழுக்க ஆன்மிகப் பயணமாக மட்டுமே அமைந்துள்ளது. தினமும் காலையில் தவறாமல் நடைபயிற்சி, யோகா செய்கிறார். அளவாக மட்டுமே சாப்பிடுகிறார். ஆன்மிகம் தவிர்த்து வேறு எதுவும் பேசக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார்.

பல்வேறு கோயில்களுக்கும் சென்று சுவாமி தரிசனம் செய்கிறார். வழிபாடு செய்யும் கோயில் களில் சில மணி நேரம் அமர்ந்து தியானம் செய்கிறார். நடுநடுவே ஆன்மிக குருமார்கள், சன்யாசிகளையும் சந்திக்கிறார்.

கேதார்நாத் பயணத்தை முடித்துக்கொண்டு இன்று பத்ரிநாத் செல்லும் ரஜினி, சுவாமி தரிசனம் செய்துவிட்டு, இரவு அங்கேயே தங்குகிறார்.

துவாராஹாட்டில் தான் கட்டியுள்ள குருசரண் ஆசிரமத்தில் 2 நாட்கள் தங்கியிருக்கவும் ரஜினி திட்டமிட்டுள்ளார். மகள் ஐஸ்வர்யா
வுடன் பாபாஜி குகைக்கும் செல்ல உள்ளார். இமயமலை சுற்றுப்பயணத்துக்கான ஏற்பாடுகளை ரஜினியின் நண்பர் ஹரி செய்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in