Published : 15 Oct 2019 07:22 PM
Last Updated : 15 Oct 2019 07:22 PM

'விக்ரம் 58' அப்டேட்: நாயகியாக ஸ்ரீநிதி ஷெட்டியிடம் பேச்சுவார்த்தை

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடிக்கவுள்ள படத்தில் நாயகியாக நடிக்க ஸ்ரீநிதி ஷெட்டியிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது படக்குழு.

விக்ரம் நடிக்கும் அவரது 58-வது படத்துக்கான பணிகள் மிக மும்முரமாக நடைபெற்று வருகிறது. அஜய் ஞானமுத்து இயக்கும் இந்தப் படத்தை லலித் குமார் தயாரிக்கவுள்ளார். அக்டோபர் 4-ம் தேதி முதல் சென்னையில் படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது.

இந்தப் படத்தில் நாயகியாக நடிக்க முதலில் ப்ரியா பவானி சங்கரிடம் பேச்சுவார்த்தை நடத்தியது படக்குழு. ஆனால், அவர் 'இந்தியன் 2', 'எஸ்.ஜே.சூர்யா - ராதாமோகன் இணையும் படம்' உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடிக்கத் தேதிகள் ஒதுக்கிவிட்டார். இதனால், 'விக்ரம் 58' படக்குழுவினர் கேட்ட தேதிகள் அவரிடமில்லை.

தற்போது அவருக்கு பதிலாக, விக்ரம் நாயகியாக நடிக்க ஸ்ரீநிதி ஷெட்டியிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். இவர் இந்தியளவில் பெரும் வரவேற்பைப் பெற்ற 'கே.ஜி.எஃப்' படத்தில் நாயகியாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. விரைவில் அவர் விக்ரமுடன் நடிக்க ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவார் எனத் தெரிகிறது.

மேலும், இந்தப் படத்துக்கு இசையமைப்பாளராக ஏ.ஆர்.ரஹ்மான் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திரப் பந்து வீச்சாளர் இர்ஃபான் பதான் ஒப்பந்தமாகியுள்ளார். அவர் நடிகராக அறிமுகமாகும் முதல் படம் இதுவாகும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x