

'விஸ்வாசம்' படத்தின் பின்னணி இசை 'மர்ஜாவன்' படத்துக்குப் பயன்படுத்தப்பட்டு இருப்பது தொடர்பாக இமான் ஆதங்கத்துடன் பதில் அளித்துள்ளார்.
மிலாப் ஜவேரி இயக்கத்தில் ரித்தேஷ் தேஷ்முக், சித்தார்த் மல்ஹோத்ரா, ரகுல் ப்ரீத் சிங் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள இந்திப் படம் 'மர்ஜாவன்'. இந்தப் படத்தின் ட்ரெய்லர் இணையத்தில் செப்டம்பர் 26-ம் தேதி வெளியானது.
இந்த ட்ரெய்லரைப் பார்த்த அஜித் ரசிகர்கள் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகினர். ஏனென்றால், 'விஸ்வாசம்' படத்தின் பின்னணி இசை அப்படியே அந்த ட்ரெய்லரின் இறுதிக் காட்சிகளுக்குப் பயன்படுத்தி இருந்தார்கள். அது 'விஸ்வாசம்' படத்தில் அஜித் அறிமுகமாகும் காட்சிக்கு இமான் அமைத்திருந்த இசையாகும்.
'மர்ஜாவன்' படத்தின் ட்ரெய்லர் விவரங்களிலும் இமானின் பெயர் இடம்பெற்றிருந்தது. ஆனால், தனது ட்விட்டர் பதிவில், தனக்கு இது குறித்து எதுவும் தெரியாது என்றும், இது தொடர்பாக தனக்கு எதுவுமே தெரிவிக்கப்படவில்லை என்றும் இமான் தெரிவித்தார். மேலும், 'விஸ்வாசம்' படத்தின் பாடல் உரிமைகளை வாங்கிய லஹரி மியூஸிக் நிறுவனத்தின் உரிமையாளர்களான டி சீரிஸ் தான் ’மர்ஜாவன்’ படத்தின் தயாரிப்பாளர்கள்.
இந்த சர்ச்சைத் தொடர்பாக 'தி இந்து' ஆங்கில நாளிதழுக்கு அளித்துள்ள பேட்டியில் இமான் கூறுகையில், "எனக்கு இதுவரை சரியான விளக்கம் தரப்படவில்லை. அந்த இசை பிரபலமாக இருப்பதாலும், அதனால் வந்த சர்ச்சைகளாலும்தான் இப்போது என் பெயர் அதில் சேர்க்கப்பட்டுள்ளது. நான் பணம் கேட்கவில்லை. மரியாதைக்கு ஒரு வார்த்தை சொல்ல வேண்டும் என்றே எதிர்பார்க்கிறேன். இதுபோன்று என்ன வேண்டுமானாலும் செய்யலாம், எதுவும் கேட்க மாட்டார்கள் என்ற மனநிலை மாற வேண்டும்" என்று தெரிவித்துள்ளார் இமான்.