

'அசுரன்' படத்தின் மொத்த வியாபாரம் ரூ.100 கோடியைக் கடந்திருப்பதற்குப் படக்குழுவினர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ், மஞ்சு வாரியர், கென் கருணாஸ், டிஜே, பாலாஜி சக்திவேல் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் 'அசுரன்'. வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். தாணு தயாரிப்பில் வெளியான இந்தப் படத்துக்கு விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
அக்டோபர் 4-ம் தேதி வெளியான இந்தப் படம் தற்போது வரை நல்ல வசூல் செய்து வருகிறது. 10 நாட்களில் மொத்த வசூலில் ரூ.50 கோடியைக் கடந்துள்ளது. மேலும், திரையரங்க வியாபாரம், இசை உரிமை, தொலைக்காட்சி உரிமம், டிஜிட்டல் உரிமம், வெளிநாட்டு உரிமம் என ஒட்டுமொத்தமாக ரூ.100 கோடியைக் கடந்துள்ளது.
தனுஷ் படங்களில் முதல் ரூ.100 கோடி வியாபாரத்தைக் கடந்த படம் இது என்று தகவல் வெளியாகியுள்ளது. இதனால் படக்குழுவினர் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர். இது தொடர்பாகப் படத்தின் தயாரிப்பாளர் தாணுவிடம் கேட்டபோது, "உண்மை தான். ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறேன். 'கபாலி', 'துப்பாக்கி', 'தெறி' ஆகிய படங்களைத் தொடர்ந்து என் தயாரிப்பில் 4-வதாக ரூ.100 கோடியைக் கடந்துள்ள படம் 'அசுரன்'" என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.
தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகும் படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் தனுஷ். இதன் படப்பிடிப்பு லண்டனில் நடைபெற்று வருகிறது. சஷிகாந்த் தயாரித்து வருகிறார்.