

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடிக்கவுள்ள படத்தில் நடிக்கவுள்ளது குறித்து மகிழ்ச்சியுடன் தமிழில் ட்வீட் செய்துள்ளார் இர்ஃபான் பதான்.
'கடாரம் கொண்டான்' படத்துக்குப் பிறகு அஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் விக்ரம். இந்தப் படத்துக்கான முதற்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பாளராகப் பணிபுரியவுள்ளார்.
அக்டோபர் 4-ம் தேதி சென்னையில் படப்பிடிப்பு தொடங்கியது. இதனைத் தொடர்ந்து வெளிநாட்டில் பிரதான காட்சிகளைப் படமாக்க முடிவு செய்துள்ளது படக்குழு. இதனிடையே இந்தப் படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திரப் பந்து வீச்சாளர் இர்ஃபான் பதான் ஒப்பந்தமாகியுள்ளார்.
அவர் நடிகராக அறிமுகமாகும் முதல் படம் இதுவாகும். தமிழில் அறிமுகமாகவுள்ளதால் இர்ஃபான் பதான் தமிழிலேயே ட்வீட் செய்துள்ளார். விக்ரமுடன் நடிக்கவுள்ளது குறித்து, "என் அன்பான புள்ளைங்கோ எல்லாத்துக்கும் வணக்கம். நீங்கள் கொடுத்த ஆதரவுக்கு மிக்க நன்றி. நடிகர் விக்ரம், இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் இயக்குநர் அஜய் ஞானமுத்து உடன் #சீயான்58 படத்தில் இணைய ஆவலுடன் காத்திருக்கிறேன். உங்கள் ஆதரவு தொடரட்டும். மஜா பண்றோம்” என்று தெரிவித்துள்ளார் இர்ஃபான் பதான்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடத் தொடங்கியதிலிருந்து தமிழில் ட்வீட் செய்து வரவேற்பைப் பெற்றவர் ஹர்பஜன் சிங். அவரைத் தொடர்ந்து தமிழில் நடிகராக அறிமுகமாவதால் இர்ஃபான் பதானும் தமிழில் ட்வீட் செய்யத் தொடங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.