தயாரிப்புச் செலவை அதிகப்படுத்தியதாக சர்ச்சை: 'பிகில்' தயாரிப்பாளர் விளக்கம்

'பிகில்' இசை வெளியீட்டு விழாவில் அர்ச்சனா கல்பாத்தி பேசிய போது... | கோப்புப் படம்
'பிகில்' இசை வெளியீட்டு விழாவில் அர்ச்சனா கல்பாத்தி பேசிய போது... | கோப்புப் படம்
Updated on
1 min read

'பிகில்' தயாரிப்புச் செலவை இயக்குநர் அட்லீ அதிகப்படுத்தியதாக வெளியான சர்ச்சைக்கு, தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி விளக்கம் அளித்துள்ளார்.

அட்லீ இயக்கத்தில் விஜய், நயன்தாரா, இந்துஜா, யோகி பாபு, விவேக், கதிர், வர்ஷா பொல்லாமா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'பிகில்'. தீபாவளிக்கு வெளியாகவுள்ள இந்தப் படத்தின் தணிக்கைப் பணிகளும் முடிவடைந்தன. ஆனால், தணிக்கை விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை.

இந்நிலையில், சில மாதங்களுக்கு முன்பு 'பிகில்' படத்துக்குச் சொன்ன பட்ஜெட்டை இயக்குநர் அட்லீ தாண்டிவிட்டார் என்றும் தயாரிப்பு நிறுவனம் அவர் மீது கடும் கோபத்தில் இருப்பதாகவும் தகவல் வெளியானது. இது தொடர்பாகத் தயாரிப்பு நிறுவனமோ, அட்லீயோ எந்தவொரு விளக்கமும் அளிக்காமல் இருந்தனர்.

தற்போது, படத்தின் வெளியீடு நெருங்கிவிட்ட சமயத்தில் 'தயாரிப்புச் செலவை அதிகப்படுத்திவிட்டார் அட்லீ' என்ற சர்ச்சைக்கு முதல் முறையாகப் பதிலளித்துள்ளார் அர்ச்சனா கல்பாத்தி. இது தொடர்பாக அவர் கூறுகையில், "ஒரு தயாரிப்பாளருக்கு நல்ல படம் வேண்டும். அதுதான் முக்கியம். தயாரிப்புச் செலவு என்பது தயாரிப்பு நிறுவனத்துக்கும் இயக்குநருக்கும் இடையே சம்பந்தப்பட்டது.

நாங்கள் பணம் கொடுக்கவில்லை என்றால் அவரால் எடுக்க முடியாது. நம்பிக்கை இருப்பதால்தான் செலவும் செய்கிறோம். இந்த மாதிரியான குற்றச்சாட்டுகள் எல்லாம் நியாயமற்றது என நினைக்கிறேன். ஒரு ஆச்சரியப்படத்தக்கப் படத்தைக் கொடுத்துள்ளார். உங்களுக்கு ஒரு பெரிய படம் தேவையொன்றால், பெரிய பொருட்செலவு செய்துதானே ஆக வேண்டும். இறுதியில் படம் பேசும். அது ரொம்பவே முக்கியம்" என்று தெரிவித்துள்ளார் அர்ச்சனா கல்பாத்தி.

இதன் மூலம் 'பிகில்' படத்தின் தயாரிப்புச் செலவை அதிகப்படுத்திவிட்டார் அட்லீ என்ற செய்திக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டதாகக் கருதப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in