

பிக் பாஸ் நிகழ்வுகள் குறித்து இயக்குநர் சேரன் மற்றும் வசந்தபாலன் ஒரே மேடையில் கருத்துகளைப் பரிமாறிக் கொண்டனர்.
பிக் பாஸ் சீசன் 3 ஒளிபரப்பானபோது, இயக்குநர் சேரன் - சரவணன் இருவருக்கும் விவாதம் ஒன்று நடைபெற்றது. அப்போது தமிழ்த் திரையுலகின் பல்வேறு இயக்குநர்களும், இயக்குநர் சேரன் பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேற வேண்டும் என வலியுறுத்தினார்கள்.
அந்தச் சமயத்தில் இயக்குநர் வசந்தபாலனும் தனது ஃபேஸ்புக் பதிவில், "பிக் பாஸ் அரங்கில் இருப்பவர்களுக்கு உங்களின் உயரம் தெரியாது. நீங்களும் நடிகர் சரவணனும் ஒன்று என்றுதான் நினைப்பார்கள். அறியாமை என்ன செய்ய. உடனே பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறுங்கள். இயக்குநர் சங்கப் பதவியில் கவுரவக் குறைவு ஏற்பட்ட போது உடனே அதை விட்டு வெளியேறினீர்கள்" என்று தெரிவித்தார்.
’பிக் பாஸ்’ நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய பிறகு, 'ராஜாவுக்கு செக்' பத்திரிகையாளர் சந்திப்பில் இயக்குநர் சேரன் மற்றும் வசந்தபாலன் இருவரும் சந்தித்துக் கொண்டார்கள். அதில், இயக்குநர் வசந்தபாலன் பேசும் போது, "பிக் பாஸ் வீட்டிற்குள் சேரன் சென்றுள்ளார் என என் மனைவி சொன்னவுடன் ரொம்பவே பதட்டப்பட்டேன். 'பாரதி கண்ணம்மா', 'பொற்காலம்', 'ஆட்டோகிராப்' படங்கள் எடுத்த கலைஞனை இவ்வளவு அலைக்கழிக்கும் சமூகத்தில்தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அனைத்து சூழலிலும் நேர்மை என்ற நெஞ்சுரம் மூலமாக, உண்மையானவன், நேர்மையானவன் என உலகத்துக்குக் காண்பித்தவர் சேரன். கீழ்மையைக் கொஞ்சம் கூட பயன்படுத்தாமல் இருந்தார். என்னால் சத்தியமாக அப்படி இருக்க முடியாது. ரொம்ப அவரை தவிக்க விடக்கூடாது. தூக்கிவைத்துக் கொண்டாட வேண்டிய தருணத்தில் அவர் இருக்கிறார்" என்று பேசினார்.
அதற்குப் பிறகு பேசிய இயக்குநர் சேரன், "வசந்தபாலன் இங்கு பேசினார். அவர் கூறியது போலவே, நாம் அப்பாவாக உணரும் தருணம் மிக முக்கியமானது. நீ அப்பா, நீ அப்பா, நீ அப்பா எனப் பல இடங்களில் பல தருணங்கள் உணர்த்தியுள்ளன. என் குழந்தை பிறக்கும் போது, நண்பனிடம் சென்று பணம் வாங்கி வருவதற்குள் குழந்தை பிறந்துவிட்டது. அப்பாவாக உணரும் தருணம் மிக அழகானது.
அம்மா எப்படி நமக்குச் சமைத்துக் கொடுத்து அழகு பார்க்கிறாளோ, அதே போல் அப்பாவும் நமக்குப் பின்னால் இருந்துகொண்டு நம்மை ஊக்கப்படுத்தி, தூக்கிவிடுகிற ஒரு ஆத்மா. அந்த ஆத்மாவின் வலி ஒவ்வொரு காலகட்டத்திலும் உணர முடியும். ஆனால், நாம் அதை யாரிடமும் பகிரமாட்டோம். அந்த வலி நமக்குள்ளேயே இருக்கும்.
சமீபத்தில் பிக் பாஸ் வீட்டுக்குள் போனபோது கூட, அப்பாவாக இருக்கக் கடவுள் இன்னொரு வாய்ப்பு கொடுத்தார். உண்மையோடு, நேர்மையோடு, என் மகளைப் பார்ப்பது போல் பார்த்துக்கொண்டேன். அதில் பாசாங்கு, போலி என எதுவுமில்லை. அந்தப் பாசத்தைப் போலியாகக் காட்டினேன் என்றால், இந்த உலகத்தில் வாழ்வதற்கே அருகதை இல்லாதவன். ஆகையால் உண்மையாகத்தான் காண்பிக்க முடிந்தது.
பிக் பாஸ் வீட்டுக்குள் இருந்த போது நீங்கள் எழுதியது எனக்கு உள்ளுக்கும் செய்தி வந்தது. வெளியே வந்தவுடனும் சொன்னார்கள். அவர்களிடம் அவர் என் நண்பர், அவருக்கு என்னைப் பற்றித் தெரியும். தவறுகளைச் சுட்டிக் காட்டுவது, நேர்மையைப் பாராட்டுவது அவருக்குத் தெரியும். என் மீதான அன்பின் மிகுதியால் மட்டுமேதான் இது நடந்திருக்குமே ஒழிய, அதில் வேறொன்றுமில்லை.
அந்தச் சமயத்தில் பேட்டியளித்த அனைத்து நண்பர்களுக்கும் அதையேதான் சொன்னேன். அக்கறையுள்ளவன் மட்டுமே பக்கத்தில் வந்து நிற்பான். அக்கறையுள்ளவன்தான் கேட்பான். மற்றவர்கள் பார்த்துச் சிரித்துவிட்டுப் போய்விடுவார்கள். உங்கள் அக்கறை எனக்குப் பிடித்திருந்தது. அதற்கு நான் தலை வணங்குகிறேன். நீங்கள் என்னைப் போல ஒரு உணர்வுப்பூர்வமான படைப்பாளி" என்று பேசினார் இயக்குநர் சேரன்.