Published : 15 Oct 2019 10:44 AM
Last Updated : 15 Oct 2019 10:44 AM

'அசுரன்' படத்தின் வெற்றி, வெளியீட்டில் நிலவும் சிக்கல், C2H முயற்சி: மனம் திறந்த சேரன்

'அசுரன்' படத்தின் வெற்றி, வெளியீட்டில் நிலவும் சிக்கல் மற்றும் C2H முயற்சி குறித்து 'ராஜாவுக்கு செக்' பத்திரிகையாளர் சந்திப்பில் சேரன் பேசினார்.

சாய் ராஜ்குமார் இயக்கத்தில் சேரன், சிருஷ்டி டாங்கே, சரயு உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'ராஜாவுக்கு செக்'. சோமன் மற்றும் தாமஸ் கோக்காட்டி இணைந்து தயாரித்துள்ள இந்தப் படத்தை எஸ்.டி.சி பிக்சர்ஸ் வெளியிடவுள்ளது. இந்தப் படத்தின் பணிகள் அனைத்தும் முடிவடைந்ததால், படத்தை விளம்பரப்படுத்தும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

இதற்காகப் பத்திரிகையாளர்களைச் சந்தித்தது படக்குழு. இதில் படக்குழுவினர் அனைவருமே கலந்துகொண்டனர். இச்சந்திப்பில் இயக்குநர் சேரன் பேசியதாவது:

"’ராஜாவுக்கு செக்’ படத்தில் என்னைத் தவிர மற்ற அனைவருமே கடினமாக உழைத்திருக்கிறார்கள். அங்கீகாரத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள். ஏன் என்னைத் தவிர என்றால் கொஞ்சம் அனுபவித்து, பார்த்துக் கடந்துவிட்டேன். ஆனால், இன்னும் பாராட்டுகளை எதிர்நோக்கிக் காத்திருப்பவர்கள் இந்தப் படத்தில் பணிபுரிந்துள்ள இளைஞர்கள். இந்தப் படத்தைப் பார்த்ததற்குப் பிறகு, ரொம்பவே சந்தோஷமாக இருக்கிறேன்.

இவ்வளவு படங்களில் ரொம்பக் குறைவான நாட்களே வேலை செய்தது இந்தப் படத்தில்தான். மொத்தமாக 25 நாட்கள் மட்டுமே நடித்தேன். இயக்குநருடைய உழைப்பு ரொம்பவே பாராட்டத்தக்கது. இதுதான் வேண்டும், இது போதும் என்ற தீர்க்கமான பார்வையோடு இருந்தார். த்ரில்லர், க்ரைம் என நிறைய படங்கள் பார்த்திருப்பீர்கள். ஒரு குடும்பத்துக்கான த்ரில்லர் படமாக இது இருக்கும். வெறும் கமர்ஷியல் படமாக மட்டுமல்லாமல், பார்வையாளர்கள் பதட்டப்படுகிற ஒரு படமாக இது இருக்கும். ஆகையால் மக்கள் கொண்டாடுவார்கள் என நம்புகிறேன்.

இந்தப் படத்துக்குச் சரியான திரையரங்குகள், காட்சிகள் கொடுக்க வேண்டும். எந்தப் படத்துக்கு எந்தக் காட்சி கொடுக்கிறீர்கள் என்பதில் தான் ஒரு படத்தின் வெற்றி இருக்கிறது. நல்ல குடும்பக் கதைக்குக் காலைக் காட்சி கொடுத்தீர்கள் என்றால் யாரும் வரமாட்டார்கள். இந்தப் படத்துக்குச் சரியாகக் கணித்துக் காட்சிகள் கொடுக்க வேண்டும் என்பது என் வேண்டுகோள். இந்தப் படம் பார்த்தவுடன் மகளுடைய கரம் அல்லது மகனுடைய கரத்தைத் தேடுவீர்கள். உறவுகள் இல்லாத வாழ்க்கை இல்லை. அவர்கள் இல்லையென்றால் நிம்மதியோ, சந்தோஷத்தையோ அடைந்துவிட முடியாது.

சமீபமாக தமிழ்த் திரையுலகில் நிறைய நல்ல படைப்பாளிகள் உருவாகிவிட்டார்கள். 'அசுரன்’ படத்தைப் பிரமித்துப் பார்த்தேன். என்ன ஒரு அழகான திரைமொழி, எப்படியொரு மொழியாக்கத்தை உருவாக்கி இருக்கிறார்கள். ஒரு பக்கம் கமர்ஷியலாக நடித்துக் கொண்டிருக்கிற நடிகர், 55 வயதுடையவராகப் பல்லுக்கு இடையே இடைவெளி ஒன்றை உருவாக்கிக் கொண்டு நடிப்பதற்கு எவ்வளவு துணிச்சல் வேண்டும். அந்த மாதிரியான படங்களுக்கு நடிகர்களின் ஒத்துழைப்பு கிடைப்பதெல்லாம் பெரிய விஷயம்.

'அசுரன்' மாதிரியான படங்கள் பண்ணுவதற்குப் படைப்பாளிகள் நிறைய இருக்கிறார்கள். அதற்கு இருக்கும் ஒரே பிரச்சினை மார்க்கெட்டிங், வியாபாரம்தான். வியாபாரப் பிரச்சினையில் சிக்கிக் கொண்டிருக்கிறது. 'ஒத்த செருப்பு' படத்தைப் பார்த்துவிட்டுக் கூட யோசித்தேன். நல்ல படைப்பாளிகளை எல்லாம் எங்கோ ஏங்கிக் கொண்டு, தவித்துக் கொண்டு இருக்கிறார்களே என்று. ஒரே கூட்டுக்குள் கொண்டு வர முடியாதா என யோசித்தேன். அதற்கான முயற்சி நடைபெறாமலேயே போய்விட்டது. அந்த முயற்சி வென்றிருந்தால், அப்படியான படைப்பாளிகள் எங்கேயும் தேங்கி, தயங்கி நிற்க வேண்டியதிருக்காது".

இவ்வாறு இயக்குநர் சேரன் பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x