

சந்தானம் நடிக்கவுள்ள 'டிக்கிலோனா' படத்தில் ஹர்பஜன் சிங் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.
ஜான்சன் இயக்கத்தில் சந்தானம் நடிப்பில் இறுதியாக வெளியான படம் 'ஏ1'. இந்தப் படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்ததைத் தொடர்ந்து, சந்தானத்துக்கு பல்வேறு இயக்குநர்கள் கதைகள் சொல்லி வருகிறார்கள்.
'ஏ1' வெற்றிக்குப் பிறகு சந்தானம் நாயகனாக நடிக்க ஒப்பந்தமான படம் 'டிக்கிலோனா'. இந்தப் படத்தை பல்வேறு படங்களுக்குத் திரைக்கதைகளுக்கு உதவியாக இருந்த எழுத்தாளர் கார்த்திக் யோகி இயக்குகிறார்.கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் வழங்க இயக்குநர் சினிஷ் தயாரிப்பாளராக அறிமுகமாகிறார். இவர் ஜெய், அஞ்சலி நடித்த 'பலூன்' படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
'டிக்கிலோனா' படம் குறித்த முக்கிய அறிவிப்பு இன்று (அக்டோபர் 14) மாலை 5 மணிக்கு வெளியிடப்படும் எனப் படக்குழு அறிவித்தது. என்னவாக இருக்கும் என்று பலரும் எதிர்நோக்க, யாருமே எதிர்பாராத வண்ணம் இந்தப் படத்தில் சந்தானத்துடன் நடிக்க இந்திய அணியின் நட்சத்திர பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாட ஒப்பந்தமானதிலிருந்தே தொடர்ச்சியாகத் தமிழில் ட்வீட் செய்து, சமூக வலைதளத்தில் அனைவரது பாராட்டையும் பெற்றார் ஹர்பஜன் சிங். தற்போது சந்தானத்துடன் நடிக்க ஒப்பந்தமாகியிருப்பதற்குப் பலரும் ஹர்பஜன் சிங்கிற்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். அவர் நடிகராக அறிமுகமாகும் முதல் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகராக அறிமுகமாவது குறித்து ஹர்பஜன் சிங் தனது ட்விட்டர் பதிவில், "என்னைத் தமிழ் சினிமாவில் அறிமுகம் செய்யும் கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ், சினிஷ், சந்தானம் உள்ளிட்ட படக்குழுவுக்கு நன்றி, தலைவர், தல, தளபதி உருவாகிய பூமி. தமிழ் வார்த்தைகளால் வார்த்திட்ட என்னை தூக்கி நிறுத்திய உறவுகளே. உங்களால் வெள்ளித்திரையில்.இந்த வளர்ச்சிக்குக் காரணம் சரவணன் பாண்டியன்" என்று தெரிவித்துள்ளார்.
இந்தப் படத்தில் சந்தானம் மூன்று வேடங்களில் நடிக்கிறார். இசையமைப்பாளராக யுவன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அடுத்தாண்டு ஏப்ரல் மாதம் வெளியிடலாம் என படக்குழு தீர்மானித்துள்ளது.