

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடித்து வரும் படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க இர்ஃபான் பதான் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
'கடாரம் கொண்டான்' படத்தைத் தொடர்ந்து அஜய் ஞானமுத்து கூறிய கதை பிடித்துவிடவே, அதில் நடிக்க ஒப்பந்தமானார் விக்ரம். லலித் குமார் தயாரிக்கும் இந்தப் படத்தின் முதற்கட்டப் பணிகள் நீண்ட நாட்களாக நடைபெற்று வருகின்றன.
பெரிய முதலீட்டில் உருவாகும் படம் என்பதால், வெளிநாடுகளில் இதற்கான படப்பிடிப்பு இடங்கள் குறித்த தேர்வு நடைபெற்றது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பாளராகப் பணிபுரியவுள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் 4-ம் தேதி சென்னையில் தொடங்கப்பட்டது.
தற்போது இந்தப் படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க இந்திய அணியின் நட்சத்திரப் பந்துவீச்சாளர் இர்ஃபான் பதான் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்தப் படத்தின் மூலமாக நடிகராகவும் அறிமுகமாகிறார் இர்ஃபான். படக்குழுவினரின் இந்த அறிவிப்பு விக்ரம் ரசிகர்களைப் பெரும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
முன்பாக, தமிழில் அனுராக் காஷ்யாப்பை வில்லனாக அறிமுகப்படுத்தியவர் இயக்குநர் அஜய் ஞானமுத்து. இந்தப் படத்தின் மூலம் இந்திய அணியின் நட்சத்திரப் பந்துவீச்சாளரை நடிகராக அறிமுகப்படுத்துகிறார். மேலும், இந்தப் படத்தில் பல்வேறு நடிகர்கள் நடிக்கவுள்ளதாகவும் ஒவ்வொன்றாக அறிவிக்கப்படும் என்றும் படக்குழுவினர் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.