

விஷால் - அனிஷா திருமணம் கண்டிப்பாக நடைபெறும் என்று விஷாலின் தந்தை ஜி.கே.ரெட்டி தெரிவித்துள்ளார்.
நவரசன் இயக்கத்தில் ராதிகா குமாரசுவாமி நடிப்பில் உருவாகியுள்ள படம் 'தமயந்தி'. கன்னடத்தில் உருவாகியுள்ள இந்தப் படம் தமிழிலும் வெளியாகவுள்ளது. இதன் பத்திரிகையாளர் சந்திப்பு சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர்.
விஷாலின் தந்தை ஜி.கே.ரெட்டி இந்தப் படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். ஆனால், உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அவரால் 'தமயந்தி' படத்தில் நடிக்க முடியாமல் போய்விட்டது. ஆனாலும், பத்திரிகையாளர் சந்ஹிப்பில் ஜி.கே.ரெட்டி நட்புரீதியாகக் கலந்துகொண்டார்.
அப்போது பத்திரிகையாளர்கள் விஷாலின் திருமணம் குறித்து கேள்விகள் எழுப்பினர். அதற்கு, "விஷால் - அனிஷா திருமணம் கண்டிப்பாக நடைபெறும். விஷாலுக்குத் திருமணம் நடக்க வேண்டும் என்பதுதான் அனைவரின் ஆசையும். நடிகர் சங்கக் கட்டிடம் முடியும் வரை யாரும் திருமணம் பற்றி பேசக் கூடாது என கண்டிஷன் போட்டிருக்கார். அப்படியிருந்தும் அவர் ஒரு பெண்ணைக் காதலித்து நிச்சயதார்த்தம் கூட ஆகிவிட்டது.
நடிகர் சங்கத் தேர்தல் பிரச்சினை இப்போது நீதிமன்றத்தில் இருக்கிறது. அவர் அந்தக் கட்டிடம் தயாராகி அதில்தான் திருமணம் செய்ய வேண்டும் என ஆசைப்படுகிறார். அனைத்து சரியாகி விரைவில் நல்லபடியாகத் திருமணம் நடக்கும். மேலும், திருமணம் குறித்து விஷாலுக்கு அதிக நெருக்கடி கொடுக்க முடியவில்லை” என்று தெரிவித்துள்ளார் விஷாலின் தந்தை ஜி.கே.ரெட்டி.
விஷால்- அனிஷா திருமணம் குறித்து பல்வேறு வதந்திகள் எழுந்த நிலையில் ஜி.கே.ரெட்டி இவ்வாறு கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.