

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள 'பிகில்' படத்தின் ட்ரெய்லருக்கு இணையத்தில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. மேலும், புதிய சாதனையையும் படைத்துள்ளது.
அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் 'பிகில்'. ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்தப் படம் தீபாவளி வெளியாகவுள்ளது. நயன்தாரா, கதிர், இந்துஜா உள்ளிட்ட பலர் விஜய்யுடன் நடித்துள்ள இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். தீபாவளி வெளியீடு என்பதால் இந்தப் படத்தின் ட்ரெய்லர் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது.
அக்டோபர் 12-ம் தேதி மாலை 6 மணியளவில் இணையத்தில் 'பிகில்' படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்பட்டது. தொடர்ச்சியாக பல்வேறு சாதனைகளையும் நிகழ்த்தியது இந்தப் படத்தின் ட்ரெய்லர்.
தென்னிந்தியப் படங்களின் ட்ரெய்லர்களில் குறைவான நேரத்தில் 10 மில்லியன் பார்வைகளைக் கடந்து முதல் சாதனையை நிகழ்த்தியது. மேலும், 16 லட்சம் லைக்குகளை குவித்த முதல் தென்னிந்தியப் படத்தின் ட்ரெய்லர் என்ற சாதனையையும் செய்துள்ளது. 38 நிமிடங்களில் 5 மில்லியன் பார்வைகளைப் பெற்றது. தற்போது வரை 17 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளதாக இந்தப் படத்தின் ட்ரெய்லர் இடம்பெற்றுள்ள சோனி நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
மேலும், இந்தப் படத்தின் ட்ரெய்லருக்கு ஷாருக்கான், கரண் ஜோஹர் தொடங்கி பல்வேறு திரையுலக பிரபலங்களும் தங்களுடைய வாழ்த்தைத் தெரிவித்துள்ளனர். அதே வேளையில், ட்ரெய்லரில் இடம்பெற்றுள்ள ஆரம்ப வசனக் காட்சி அப்படியே 'சக் தே இந்தியா' படத்தின் காப்பி என்றும் கிண்டல் செய்து வருகிறார்கள்.
தற்போது படத்தின் தணிக்கை செய்வதற்குப் படக்குழு மும்முரமாக பணிபுரிந்து வருகிறது. அக்டோபர் 25-ம் தேதி வெளியிடலாம் என ஆலோசனை செய்து வருகிறது படக்குழு. 'பிகில்’ படத்தைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் விஜய். இந்தப் படத்தை சேவியர் பிரிட்டோ தயாரித்து வருகிறார்.