

நடிகர் சங்கத் தேர்தலில் சரத்குமார் அணியில் நடிகர்கள் சிம்பு, தனுஷ் போட்டியிட உள்ளதாக திருச்சி மாவட்ட நாடக நடிகர்கள் சங்க பொதுச் செயலாளர் முகமது மஸ்தான் தெரிவித்தார்.
தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் ஆதரவு கேட்டு விஷால் தரப்பினர் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள நாடக நடிகர்களைச் சந்தித்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக இன்று (ஜூலை 19) மாலை திருச்சி தேவர் ஹாலில் நாடக கலைஞர்களைச் சந்திக்கத் திட்டமிட்டுள்ளனர்.
இந்நிலையில் திருச்சி மாவட்ட நாடக நடிகர்கள் சங்க அவசர ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்குப் பின் சங்கப் பொதுச் செயலாளர் எம்.எஸ்.முகமது மஸ்தான் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
திருச்சி மாவட்ட நாடக நடிகர் சங்கத்தில் 248 உறுப்பினர்கள் உள்ளனர். இவர்களில் 148 பேருக்கு தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் வாக்குரிமை உள்ளது.
திருச்சி நாடக நடிகர் சங்கம் சரத்குமார், ராதாரவி அணியை ஆதரிக்கிறது.
சரத்குமார் அணி சார்பில் சிம்பு போட்டியிடப் போகிறார். அது பொருளாளர் பதவியாக இருக்க வாய்ப்புள்ளது. அதேபோல, ஏற்கெனவே எங்கள் அணியிலுள்ள தனுஷ், எஸ்.எஸ்.ஆர். மகன் கண்ணன் போன்றோரும் இத்தேர்தலில் போட்டியிட உள்ளனர்.
திருச்சியில் விஷால் நடத்தும் ஆலோசனைக் கூட்டத்தில் எங்கள் சங்கத்தைச் சேர்ந்த யாரும் பங்கேற்க மாட்டார்கள் என்றார் எம்.எஸ்.முகமது மஸ்தான்.