

முரட்டு சிங்கிளாக இருக்கும் இளைஞன் காதலியிடம் அத்துமீறினால் அதனால் பிரச்சினைகளைச் சந்தித்தால் அதுவே 'பப்பி'.
பொறியியல் கல்லூரியில் படிக்கும் இறுதியாண்டு மாணவர் வருண். எந்த அக்கறையும் இல்லாத இளைஞனாக வலம் வருகிறார். ஆபாசத் தளங்களை முடக்கியதற்காக வருத்தப்படும் அவர், வகுப்பறையில் ஆபாசப் படம் பார்த்து பேராசிரியையிடம் வசமாக சிக்க, சஸ்பெண்ட் செய்யப்படுகிறார். சீனியர் யோகி பாபுவுடன் இணைந்து இது தன் பிரச்சினை இல்லை, சமூகத்தின் பிரச்சினை என்று சொல்லி தன் வேட்கையைத் தணித்துக் கொள்ள முயல்கிறார்.
தன் வீட்டு மாடியில் வாடகைக்குக் குடியிருக்க வரும் இளம்பெண் சம்யுக்தா ஹெக்டேவுடன் நெருங்கிப் பழகி காதலிக்கிறார். நண்பனின் நிச்சயதார்த்தத்துக்குச் சென்று அங்கு காதலியிடம் எல்லை மீறுகிறார். இதனால் சிக்கல் நேர்கிறது. அது உன் பிரச்சினை என்று காதலியைக் காயப்படுத்துகிறார். சம்யுக்தா ஹெக்டேவுக்கு வரும் சிக்கல் என்ன, வருண் என்ன செய்கிறார், இவர்கள் இருவரும் இணைந்தார்களா? வருண் செல்லமாக வளர்க்கும் பப்பி என்ன ஆகிறது, வருண் மனம் மாறினாரா போன்ற கேள்விகளுக்குப் பதில் சொல்கிறது திரைக்கதை.
இந்தப் படத்துக்கு எப்படி யுஏ சான்றிதழ் தந்தார்கள் எனத் தெரியவில்லை. வசனங்கள், காட்சி அமைப்புகள், திரைக்கதையின் போக்கு என எல்லா வடிவங்களிலும் ஆபாசம் விரவிக் கிடக்கிறது. த்ரிஷா இல்லனா நயன்தாரா போன்ற படங்களின் தொடர்ச்சியாக கதைக்களத்தைக் கட்டமைத்திருக்கிறார் இயக்குநர் நட்டுதேவ். அவர் தன் பெயரை முரட்டு சிங்கிள் என்றே முதலில் விளம்பரப்படுத்தி வந்தார். தன் பெயர் குறித்த சுவாரஸ்யத்தை ஏற்படுத்துவதில் காட்டிய முனைப்பை, படத்தின் கதை, திரைக்கதையில் இயக்குநர் காட்டியிருக்கலாம்.
காதலில் விழுந்து காமத்தைக் கடப்பது என்றில்லாமல் காமத்தில் இருந்து காதலைக் கடப்பது மாதிரியான பிம்பத்தை இயக்குநர் நட்டுதேவ் கட்டமைத்துள்ளார். காமமே பிரதானம் என்பதை காட்சிகளின் வழி நிறுவ அதிகம் முயல்கிறார். அதில் தெறிக்கும் ஆபாசம் முகம் சுளிக்க வைக்கிறது.
'பப்பி' படத்தின் மூலம் அறிமுக நாயகனாகியுள்ளார் வருண். முன்னதாக 'ஒருநாள் இரவில்', 'வனமகன்', 'போகன்' உள்ளிட்ட படங்களில் துணைக் கதாபாத்திரத்தில் நடித்தவர் இப்போது நாயகனாகத் தகுதி உயர்வு பெற்றுள்ளார். அப்பாவுக்கு பயந்து நடிப்பது, காதலியை அப்பாவுக்குத் தெரியாமல் வீட்டிலிருந்து வெளியேற்றுவது போன்ற சில காட்சிகளில் இயல்பாக நடித்துள்ளார். ஆனால், குற்ற உணர்ச்சியையோ, தவறு செய்த பதற்றத்தையோ நடிப்பில் காட்டவில்லை. சில காட்சிகளில் சம்பந்தமே இல்லாமல் சத்தம் போட்டுப் பேசி நடிக்க முயல்கிறார். அது செயற்கையின் உச்சம்.
சம்யுக்தா ஹெக்டே சிக்கலான ஒரு கதாபாத்திரத்தை ஓரளவு சரியாகக் கையாள்கிறார். பிரச்சினையின் தீவிரம் உணர்ந்து உடையும் தருணங்களில் நல்ல நடிப்பை வழங்கியுள்ளார்.
படத்தின் ஒரே ஆறுதல் யோகி பாபுதான். நகைச்சுவையில் தடம் பதித்து பார்வையாளர்களைக் காப்பாற்றும் ஆபத்பாந்தவனாக இருக்கிறார். கதாநாயகன் கூடவே வருபவர் என்பதால் அவர் நெகிழ்ந்து மகிழ்ந்து உருக்கம் காட்ட ஒரு காட்சியை வைத்துள்ளனர். அது படத்துக்கு எந்தவிதத்திலும் ஒத்துழைப்பை நல்கவில்லை. படத்தின் பிரதான நோக்கம் வலுவிழந்த நிலையில் இருக்கும்போது இந்தக் காட்சி வருவதால் ரசிக்க முடியவில்லை.
நித்யா ரவீந்திரன், மாரிமுத்து, ஆர்.எஸ்.சிவாஜி போன்ற அனுபவம் வாய்ந்த நடிகர்கள் தங்கள் பங்களிப்பை சரியாகச் செய்துள்ளனர். கிட்டத்தட்ட மூன்று பேரைச் சுற்றி மட்டுமே நகரும் திரைக்கதையில் 'நான் கடவுள்' ராஜேந்திரன் அறிவுறுத்துகிறேன் பேர்வழி என்று வந்துபோகிறார். அதனால் எந்தப் பலனும் இல்லை.
தீபக் குமார் பாடியின் ஒளிப்பதிவு படத்துக்குப் பாதகத்தை வரவைக்கவில்லை. தரண்குமார் இசையில் பாடல்கள் தேறவில்லை. வசனத்தையே பிச்சுப் போட்டு பாடல் என்று பரிமாறியிருக்கும் விதம் அலுப்பு ரகம். அஞ்சு மணிக்கு கையப் புடிச்சேன், ஆறு மணிக்கு கட்டி அணைச்சேன், ஏழு மணிக்கு முத்தம் கொடுத்தேன் என்று வரும் பாடல் பார்வையாளர்களின் சகிப்புத்தன்மைக்கு விடப்பட்ட சவால். ரிச்சி இரண்டாம் பாதியில் இன்னும் கொஞ்சம் கத்தரி போட்டிருக்கலாம். இழுவை அதிகம்.
இயக்குநர் நட்டுதேவ் பெண்ணை போகப்பொருளாக, சதைப்பிண்டமாகவே அணுகியுள்ளார். ஆண்களின் மலினமான உணர்ச்சிகளைத் தூண்டும் விதத்திலேயே காட்சிகளை உருவாக்கியுள்ளார். இந்தக் கதையமைப்புக்காக அவர் கவலைப்படவுமில்லை, கஷ்டப்படவும் இல்லை. முந்தைய அடல்ட் காமெடிப் படங்களின் தொடர்ச்சியை திரைக்கதை நகர்த்தலுக்குப் பயன்படுத்திக் கொள்கிறார். முழுக்க படம் அந்த வகையில் அமைந்துவிடக்கூடாது என்பதற்காக நாய் பிரசவத்தின் மூலம் ஒரு தீர்வைச் சொல்கிறார். ஆனால், அது வலிந்து திணிக்கப்பட்ட மிகையுணர்ச்சிக் காட்சியாகவே மிஞ்சி விடுகிறது.
திருமணத்துக்கு முந்தைய உறவின் ஆபத்து குறித்து இளைஞர்களுக்கு எச்சரிக்கை மணி அடித்த விதத்தில் மட்டும் 'பப்பி' தப்பிக்கிறது.