Published : 12 Oct 2019 04:41 PM
Last Updated : 12 Oct 2019 04:41 PM

'மிக மிக அவசரம்' படத்துக்குத் திரையரங்குகள் மறுப்பு: தயாரிப்பாளர் சங்கம்

'மிக மிக அவசரம்' படத்துக்குத் திரையரங்குகள் தர மறுப்பு தெரிவித்து இருப்பதற்குத் தயாரிப்பாளர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.

சுரேஷ் காமாட்சி இயக்கி, தயாரித்துள்ள படம் 'மிக மிக அவசரம்'. நேற்று (அக்டோபர் 11) இந்தப் படம் வெளியாவதாக இருந்தது. ஆனால், வெறும் 17 திரையரங்குகள் மட்டுமே கிடைத்ததால் படத்தின் வெளியீட்டைத் தள்ளிவைத்துள்ளது படக்குழு. இந்தப் படத்தின் வெளியீட்டு உரிமையைக் கைப்பற்றியுள்ள ரவீந்திரன் சந்திரசேகரன், 'மிக மிக அவசரம்' வெளியீடு தொடர்பான தன் வேதனைகளைப் பகிர்ந்து கொண்டார். மேலும், திரையரங்கு உரிமையாளர்களைக் கடுமையாகச் சாடிப் பேட்டியளித்தார் படத்தின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் சுரேஷ் காமாட்சி.

இந்நிலையில், 'மிக மிக அவசரம்' வெளியீட்டுச் சர்ச்சை தொடர்பாகத் தயாரிப்பாளர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

வி.ஹவுஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தயாரிப்பு மற்றும் இயக்கத்தில் உருவான ’மிக மிக அவசரம்’ திரைப்படத்தை 11.1.2019 அன்று தமிழகமெங்கும் வெளியிடத் திட்டமிட்டு அதற்காக விளம்பரங்கள் மற்றும் போஸ்டர், திரையரங்கு உறுதி செய்து அதற்கான வேலைகளைக் கடந்த ஒருமாத காலத்திற்கும் மேலாகத் தயாரிப்பு நிறுவனத்தினர் செய்து வந்துள்ளார்கள்.

இந்நிலையில் கடந்த வாரம் சித்தார்த் நடித்த ’அருவம்’, தமன்னா நடித்த ’பெட்ரோமாக்ஸ்’ படங்கள் என்ற அறிவிப்பின் பேரில் ஏற்கனவே ’மிக மிக அவசரம்’ திரைப்படத்தினை திரையிட ஒப்புக் கொண்ட திரையரங்குகள் திடீரென்று அவர்களின் நிலைப்பாட்டினை மாற்றி திரையரங்குகளை மேற்படி திரைப்படம் திரையிட மறுக்கப்பட்டது மிகவும் கண்டிக்கத்தக்க ஒன்றாகும்.

மேலும் ’மிக மிக அவசரம்’ படத்தின் வெளியீட்டிற்காக அந்த திரைப்படத்தின் வெளியீட்டாளர் லிப்ரா புரொடக்‌ஷன்ஸ் ரவீந்தர் சந்திரசேகர் 85 லட்சத்திற்கும் மேலாகச் செலவு செய்துள்ளார். தற்போது வெளியான இரண்டு படங்களை விட ’மிக மிக அவசரம்’ படத்துக்கு விளம்பர செலவு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், இது போன்ற திரைப்படம் வெளியாகும் இறுதி நாட்களில் புதிதாக ஒரு திரைப்படம் வெளிவருவதாகக் கூறி திரையரங்குகள் தரத் திரையரங்கு உரிமையாளர்கள் மறுப்பது தயாரிப்பாளருக்கு மிகப்பெரிய பொருளாதார இழப்பினை ஏற்படுத்தும் செயலாகும். இதனை ஒழுங்கு படுத்தும் வகையில் கூடிய விரைவில் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் மற்ற சங்கங்களுடன் இணைந்து ஒரு நல்ல விதிமுறைகளை ஏற்படுத்தும் என்பதை இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறோம்

இவ்வாறு தயாரிப்பாளர் சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x