

அஹ்மத் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்து வரும் படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க நானா படேகர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
'கோமாளி' படத்தைத் தொடர்ந்து லஷ்மண் இயக்கத்தில் உருவாகும் 'பூமி' படத்திலும், அஹ்மத் இயக்கத்தில் உருவாகும் படத்திலும் கவனம் செலுத்தி வருகிறார் ஜெயம் ரவி. இதில் அஹ்மத் இயக்கத்தில் உருவாகும் படம் பெரும் பொருட்செலவில் உருவாகி வருகிறது. தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என அனைத்து மொழிகளிலும் வெளியிடலாம் என்று ஆலோசித்து வருகிறார்கள்.
இதில் டாப்ஸி, ரகுமான், எம்.எஸ்.பாஸ்கர், டயானா, 'கே.ஜி.எஃப்' படத்தின் வில்லன் ராம் உள்ளிட்ட பலர் ஜெயம் ரவியுடன் நடித்து வருகிறார்கள். முழுக்க ஸ்பை த்ரில்லர் பாணியில் இந்தப் படம் உருவாகி வருகிறது. 'ஜன கண மன' என்று இப்போதைக்குத் தலைப்பிடப்பட்டுள்ள இந்தப் படத்தின் முக்கியக் கதாபாத்திரத்தில் நானா படேகர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழில் 'பொம்மலாட்டம்', 'காலா' ஆகிய படங்களைத் தொடர்ந்து நானா படேகர் ஒப்பந்தமாகியுள்ள படம் இதுவாகும். அடுத்தகட்டப் படப்பிடிப்புக்குச் செல்ல படக்குழு ஆயத்தமாகி வருகிறது. பேஷன் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்தப் படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார்.
'பூமி' மற்றும் 'ஜன கண மன' ஆகிய படங்களை முடித்துக்கொண்டு மணிரத்னம் இயக்கத்தில் உருவாகும் 'பொன்னியின் செல்வன்' படத்தில் கவனம் செலுத்தவுள்ளார் ஜெயம் ரவி.