

'சிவப்பு மஞ்சள் பச்சை' படத்தைத் தொடர்ந்து சசி இயக்கவுள்ள புதிய படத்தில், ஹரிஷ் கல்யாண் நாயகனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
சசி இயக்கத்தில் சித்தார்த், ஜி.வி.பிரகாஷ், லிஜோ மோல் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'சிவப்பு மஞ்சள் பச்சை'. அபிஷேக் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்த இந்தப் படம் செப்டம்பர் 6-ம் தேதி வெளியானது. 'எனை நோக்கி பாயும் தோட்டா' படம் இறுதிக்கட்டத்தில் தள்ளி வைக்கப்பட்டதால், போதிய விளம்பரங்களின்றி இந்தப் படம் வெளியானது.
ஆனால், விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பு கிடைத்தது. வசூல் ரீதியாக எதிர்பார்த்த வரவேற்பு இல்லையென்றாலும், முதலுக்கு மோசமில்லை என்று விநியோகஸ்தர்கள் தரப்பில் தெரிவித்தார்கள். இந்தப் படத்தின் இறுதிக்கட்டப் பணிகளின் போதே, சசியின் அடுத்த படத்தின் நாயகன் ஹரிஷ் கல்யாண் எனத் தகவல் வெளியானது.
ஆனால், யார் தயாரிப்பாளர் உள்ளிட்ட விவரங்கள் வெளியாகாமல் இருந்தது. தற்போது சசி - ஹரிஷ் கல்யாண் கூட்டணி இணைவது உறுதியாகியுள்ளது. இந்தப் படத்தை 'இஸ்பேடு ராஜாவும் இதய ராணியும்' தயாரிப்பாளர்கள் தயாரிக்கவுள்ளனர். தற்போது ஹரிஷ் கல்யாண் உடன் நடிக்கவுள்ளவர்கள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகிறது.