தீபாவளி வெளியீட்டிலிருந்து பின்வாங்கியது சங்கத்தமிழன்

தீபாவளி வெளியீட்டிலிருந்து பின்வாங்கியது சங்கத்தமிழன்
Updated on
1 min read

விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள 'சங்கத்தமிழன்' தீபாவளிக்கு வெளியாகாது என்று ரவீந்திரன் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.

விஜய் சந்தர் இயக்கத்தில் விஜய் சேதுபதி, ராஷி கண்ணா, நிவேதா பெத்துராஜ், நாசர், சூரி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'சங்கத்தமிழன்'. விஜயா புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப் படத்துக்கு விவேக் - மெர்வின் இசையமைத்துள்ளனர். இதன் பணிகள் அனைத்தும் முடிக்கப்பட்டு, வெளியீட்டுக்குத் தயாரானது.

இதன் தமிழக விநியோக உரிமையை லிப்ரா நிறுவனம் கைப்பற்றியது. 'பிகில்' மற்றும் 'கைதி' படங்களுடன் தீபாவளிக்கு வெளியாகும் என அறிவித்தார்கள். ஆனால், இதன் வெளியீட்டுச் சிக்கல் தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் 'மிக மிக அவசரம்' படம் வெளியீட்டுச் சிக்கல் தொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பில் ரவீந்திரன் சந்திரசேகரன் 'சங்கத்தமிழன்' பட வெளியீட்டுத் தொடர்பாகவும் பேசினார். அதில், "’சங்கத்தமிழன்’ படத்திற்கு இதுவரை எந்த பிரச்சினையும் இல்லை.. அப்படியே இருந்தாலும் அது என்னுடைய நிறுவனத்தினால் இல்லை, அந்தப் படத்தை தயாரித்த விஜயா புரொடக்சன்ஸ் நிறுவனம் மூலமாகப் படத்தின் ரிலீஸுக்கு முன்பே பேசி சுமூகமாக முடிக்கப்பட்டு விடும்.

இதுபோன்ற பிரச்சினைகள் எல்லாம் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்பாக பேசுவதற்கு முன்னரே சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடன் பேசி எந்த சிக்கலும் இல்லாமல் முடித்துக்கொள்ளச் சம்பந்தப்பட்டவர்கள் முன்வரவேண்டும்.. கடைசி நேரத்தில் இதுபோன்ற சிக்கல்களைத் தேவையில்லாமல் உருவாக்கக் கூடாது.

அதே போல் 'சங்கத்தமிழன்' தீபாவளிக்கு வெளியாகாது. நவம்பர் 8 அல்லது நவம்பர் 15-ல் வெளியாகும். இது தொடர்பாக எஸ்.ஆர்.பிரபுவிடம் ('கைதி' படத்தின் தயாரிப்பாளர்) பேசிவிட்டேன். நான் யாருடனும் போட்டியிட வரவில்லை. ’சங்கத்தமிழன்’ வெளியீட்டுத் தேதியை மாற்றிக் கொள்கிறேன் எனக் கூறிவிட்டேன்” என்று பேசினார் ரவீந்திரன் சந்திரசேகரன்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in