

லஷ்மண் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்து வரும் படத்துக்கு 'பூமி' எனத் தலைப்பிட்டுள்ளது படக்குழு.
ஜெயம் ரவி நடிப்பில் வெளியான 'கோமாளி' அவரது 24-வது படமாகும். இதனைத் தொடர்ந்து அவரது 25-வது படத்தின் இயக்குநர் யார் என்பதில் பலரது பெயர் அடிபட்டது. இறுதியில் லஷ்மண் இயக்கத்தில் உருவான படத்தைத் தனது 25-வது படமாக அறிவித்தார் ஜெயம் ரவி.
இந்தக் கூட்டணி முன்பாக 'ரோமியோ ஜூலியட்' மற்றும் 'போகன்' ஆகிய படங்களில் இணைந்து பணிபுரிந்துள்ளது. பெயரிடப்படாமல் இந்தப் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வந்தது. தற்போது இதற்கு 'பூமி' எனத் தலைப்பிடப்பட்டுள்ளதாகப் படக்குழு அறிவித்துள்ளது.
நாயகியாக நிதி அகர்வால், காமெடி நடிகர் சதீஷ் ஆகியோர் ஜெயம் ரவியுடன் நடித்துள்ளனர். இந்தப் படத்தை 'அடங்க மறு' படத்தைத் தயாரித்த சுஜாதா விஜயகுமார் தயாரித்து வருகிறார். இமான் இசையமைப்பாளராகவும், டெட்லி ஒளிப்பதிவாளராகவும் பணிபுரிந்து வருகிறார்கள்.
இதன் படப்பிடிப்பு இன்னும் முடிவடையவில்லை. விரைவில் அடுத்தகட்டப் படப்பிடிப்புக்கு தயாராகி வருகிறார்கள். இந்தப் படத்திலும் இயக்குநர் அஹ்மத் இயக்கத்தில் உருவாகி வரும் படத்திலும் மாறி மாறி நடித்து வருகிறார் ஜெயம் ரவி. இவ்விரண்டு படங்களையும் முடித்துவிட்டு, மணிரத்னம் இயக்கத்தில் உருவாகும் 'பொன்னியின் செல்வன்' படத்தில் கவனம் செலுத்தவுள்ளார்.