Published : 11 Oct 2019 05:33 PM
Last Updated : 11 Oct 2019 05:33 PM

முதல் பார்வை: பெட்ரோமாக்ஸ்

சி.காவேரி மாணிக்கம்

வீடு என்பது வெறும் இடம் மட்டுமல்ல, மனிதர்களின் உணர்வுகளும் கலந்தது என்பதைச் சொல்லும் படமே ‘பெட்ரோமாக்ஸ்’.

மலேசியாவில் வசிக்கும் ப்ரேம், தன்னுடைய பெற்றோர் கேரளா வெள்ளத்தில் இறந்துவிட்டதாகக் கூறி, சென்னை அருகேயுள்ள மணிமங்கலத்தில் உள்ள வீட்டை விற்க முயற்சி செய்கிறார். ஆனால், அங்குள்ள சில பேய்கள் அந்த முயற்சிக்கு முட்டுக்கட்டை போடுகின்றன.

வீட்டில் பேய்கள் இருப்பதை நம்பாத ப்ரேம், பேய்கள் இல்லையென நிரூபித்தால் அதிக கமிஷன் தருவதாக முனீஷ்காந்திடம் கூறுகிறார். பணத்தேவை இருப்பதால், முனீஷ்காந்த், காளி வெங்கட், சத்யன், திருச்சி சரவணகுமார் ஆகிய 4 பேரும் அந்த வீட்டில் 4 நாட்கள் தங்குகின்றனர்.

அவர்கள் நால்வரையும் அங்குள்ள பேய்கள் என்ன செய்தன? உண்மையிலேயே கேரளா வெள்ளத்தில் இறந்தது ப்ரேம் பெற்றோர்கள்தானா? வீட்டை விற்கும் முயற்சி என்ன ஆனது? இதற்குள் தமன்னா எப்படி வந்தார்? என்பதுதான் ‘பெட்ரோமாக்ஸ்’ படத்தின் கதை.

மீரா எனும் கதாபாத்திரத்தில் தமன்னா நடித்துள்ளார். பட விளம்பரங்களில் அவருக்குக் கொடுக்கப்பட்ட பில்டப்பைப் பார்த்தால், மையக் கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்திருப்பார் என்று தோன்றும். ஆனால், கொஞ்சம் நீட்டிக்கப்பட்ட சிறப்புத் தோற்றம்தான் எனும் அளவுக்கு தமன்னாவின் போர்ஷன் மிகக் குறைவாகவே உள்ளது.

வெள்ளாவியில் வைத்து வெளுத்தது போல ஏற்கெனவே வெள்ளையாக இருக்கும் தமன்னாவை, பேய்த் தோற்றத்துக்காக மேலும் வெள்ளையாக்கியுள்ளனர். அப்படி ஒரு வெள்ளையில் தமன்னாவைப் பார்க்கக் கொஞ்சம் பயமாகத்தான் இருக்கிறது. பேய்த் தோற்றம் என்பதால், பெரும்பாலும் ஒரே பிங்க் கவுனிலேயே இருக்கிறார். ஃப்ளாஷ்பேக்கில் புடவையில் வரும் ஒன்றிரண்டு ஃப்ரேம்களில் மட்டும் கொள்ளை அழகு.

தமன்னாவைவிட முனீஷ்காந்துக்குத்தான் இந்தப் படத்தில் அதிகக் காட்சிகள். செந்தில் கதாபாத்திரத்தில் அவர் செய்யும் காமெடிகள், சிரிப்பை வரவழைக்கின்றன. அதுவும் பயம் வந்தால் பதட்டப்படாமல் சிரிக்க வேண்டும் என டாக்டர் சொல்லியிருப்பதால், பேய்களைப் பார்த்து அவர் சிரிக்கும் இடங்களில் நிஜமாகவே நமக்கும் சிரிப்பு வருகிறது.

சினிமா நடிகனாக ஆசைப்படும் காளி கதாபாத்திரத்தில் திருச்சி சரவணகுமார் நடித்துள்ளார். விதவிதமான கெட்டப்களில் ஒவ்வொரு நடிகரைப் போலவும் அவர் நடிக்கும்போது, படம் பார்ப்பவர்கள் வாய்கொள்ளாமல் சிரிக்கின்றனர். காளி வெங்கட், சத்யன், மைனா நந்தினி, ப்ரேம், வெங்கடேஷ், மைம் கோபி, பேபி மோனிகா ஆகியோரும் தங்கள் பங்களிப்பை நன்றாகச் செய்துள்ளனர்.

தெலுங்கில் வெளியான ‘அனந்தோ ப்ரம்மா’ படத்தைத் தமிழில் ரீமேக் செய்துள்ளார் இயக்குநர் ரோஹின் வெங்கடேசன். இது பயமுறுத்தும் படம் இல்லை, காமெடிப்படம் என ஆரம்பத்திலேயே சொல்லிவிடுவதால், பயந்த சுபாவம் கொண்டவர்கள் தைரியமாக நிமிர்ந்து படம் பார்க்கிறார்கள். ஆனால், காமெடிதான் எப்போது வருமெனக் காத்திருக்க வேண்டியதாகிவிட்டது. யாருக்காகவோ காத்திருந்து காத்திருந்து... டயர்டாகி கடைசியில் படுத்தே விடுவாரே மிஸ்டர் பீன்... அதுபோல் இடைவேளை வரை காமெடிக்காக நாமும் காத்திருந்து டயர்டாகி விடுகிறது.

இடைவேளைக்குப் பின் முனீஷ்காந்த், சத்யன், காளி வெங்கட், திருச்சி சரவணகுமார் நால்வரும் நன்றாகச் சிரிக்க வைக்கின்றனர். அதுவும் ஒருகட்டம் வரைக்கும்தான். அதற்குப் பின் படம் சீரியஸ் மோடுக்குள் போய்விடுகிறது.

டேனி ரேமண்டின் ஒளிப்பதிவும், ஜிப்ரானின் இசையும் உறுத்தாமல் படத்துக்கு ஏற்றவாறு அமைந்துள்ளன. மைனா நந்தினி எழுதிய கடிதத்தை முனீஷ்காந்த் படிக்கும்போது, மைனாவின் இரண்டு காதுகளையும் முனீஷ்காந்த் பிடித்திருப்பது போல் காட்சியமைத்திருப்பது, இயக்குநரின் க்ரியேட்டிவிட்டியைக் காட்டுகிறது.

முனீஷ்காந்த் கோஷ்டியின் ஃப்ளாஷ்பேக் எதிலுமே சிரிப்பு வரவில்லை. அந்தக் காட்சிகளைக் குறைத்திருக்கலாம். அதேபோல், ஏகப்பட்ட லாஜிக் மீறல்கள் படத்தில் உள்ளன. ஆனால், பேய்ப்படம் என்றாலே லாஜிக் இருக்காது என தமிழ் சினிமாவின் இலக்கணம் இருப்பதால், மேற்கொண்டு அதைப்பற்றி விவாதிக்கத் தேவையில்லை.

அதெல்லாம் சரி... இந்தப் படத்துக்கு ‘பெட்ரோமாக்ஸ்’னு ஏன் பேர் வச்சாங்க?

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x