

5 வருடங்களுக்கு முன்பு இசை வெளியீட்டு விழா ஒன்றில் பார்த்திபன் குறித்துப் பேசியதற்கு மன்னிப்பு கோரியுள்ளார் சேரன்.
பார்த்திபன் இயக்கி, தயாரித்து, நடித்துள்ள 'ஒத்த செருப்பு' படத்துக்கு பல்வேறு திரையுலகப் பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். 'பிக் பாஸ்' நிகழ்ச்சியிலிருந்து வெளியே வந்தவுடன், அந்நிகழ்ச்சி சம்பந்தப்பட்ட விஷயங்கள் அனைத்தும் முடிந்தவுடன் 'ஒத்த செருப்பு' படத்தைப் பார்த்துள்ளார் இயக்குநர் சேரன்.
பார்த்திபனைப் பாராட்டும் வகையில் தனது ட்விட்டர் பக்கத்தில் கடிதம் ஒன்றை வெளியிட்டார் இயக்குநர் சேரன். இது வித்தியாசமான முறையிலிருந்தால் பலரும் வாழ்த்து தெரிவித்தனர். ஆனால், இயக்குநர் சேரனை ட்விட்டரில் பின்தொடரும் ரசிகர் ஒருவர், "//ஒருமேடையில் ஏதோ ஒரு குப்பை படத்தைப் பார்த்துவிட்டு என்ன பார்த்திபன் மாதிரி படம் எடுத்திருக்கிறீர்கள் என்று இயக்குநர் சேரன் கூறினார்.// பார்த்திபன் சார், இனிமே நல்ல படம் பார்த்துட்டு பார்த்திபன் மாதிரி படம் எடுத்திருக்கிறீர்கள் என்று சொல்லுவார்" எனக் குறிப்பிட்டார்.
அவருக்குப் பதிலளிக்கும் விதமாக இயக்குநர் சேரன், "ஏதோ ஒரு தவறான புரிதலில் சொல்லியிருக்கிறார்.. அவர் மேல் மிகப்பெரிய மரியாதை வைத்துள்ளேன். எந்தப் படத்தைப் பார்த்து அப்படிச் சொன்னேன் எனத் தெரியவில்லை.. சொல்லியிருந்தால் அது கண்டிப்பாக குப்பை படமாக இருக்காது.. சற்று டபுள்மீனிங் தூக்கலாக இருந்திருக்கும். அதனால் சொல்லியிருப்பேன்" எனத் தெரிவித்தார்.
இருவருக்கும் பதிலளிக்கும் விதமாக இயக்குநர் பார்த்திபன், “ராமகிருஷ்ணன் இயக்கிய படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் மேடையில் நீங்கள் பேசியதை எனக்குக் காண்பித்தார்கள். மிகவும் வருந்தினேன். அவமானங்களில் ஒன்றாக மனதில் தேங்கித்தான் போனது. ஏதோ ஒரு தூண்டலில் அது வெளிப்பட்டது” என்று தெரிவித்தார்.
உடனடியாக பார்த்திபனுக்கு பதிலளிக்கும் விதமாக சேரன் ட்வீட் செய்தார். அதில், "அந்தத் திரைப்படம் உங்கள் பாணியில் இருப்பதாகக் குறிப்பிட நினைத்தேனே தவிர குப்பைப் படம் என்ற வார்த்தையைப் பயன்படுத்தியிருக்க மாட்டேன்.. தவறி வந்திருந்தால் மன்னிக்கவும். 'புதிய பாதை', 'ஹவுஸ்ஃபுல்', 'குடைக்குள் மழை', 'கதை திரைக்கதை வசனம் இயக்கம்', 'ஒத்த செருப்பு' எல்லாம் பார்த்து என்னை மறந்து பேசியிருக்கிறேன். உங்களிடம்" என்று முற்றுப்புள்ளி வைத்தார் இயக்குநர் சேரன்.
5 ஆண்டுகள் முன்பு நடந்தது என்ன?
சேரனிடம் உதவியாளராகப் பணிபுரிந்தவர் ராமகிருஷ்ணன். அவரது இயக்கத்தில் உருவான 'போங்கடி நீங்களும் உங்க காதலும்' படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இயக்குநர் சேரன் பேசும்போது, "இந்தப் படத்தைப் பார்க்கும்போது ராமகிருஷ்ணன் நல்லவனா கெட்டவனா எனக் கேட்கத் தோன்றும். ஏனென்றால் திடீரென்று 10 பெண்களுடன் சேர்ந்து கும்மாளம் போடுகிறார். அதென்ன ராமகிருஷ்ணன் வேட்டியைத் தூக்கித் தூக்கி ஆடுற. அது கஷ்டமாக இருந்தது. நான் இந்தப் படத்தை எடுத்திருந்தால் 'நீங்களும் உங்க காதலும்' என எடுத்திருப்பேன். ஒருவேளை நீ பார்த்திபன் சாரிடம் உதவி இயக்குநராகச் சேர்ந்திருக்கலாம்" எனப் பேசியிருந்தார் இயக்குநர் சேரன்.
தற்போது இந்தப் பேச்சை மறக்காமல் வைத்திருந்த இயக்குநர் பார்த்திபன், 'ஒத்த செருப்பு' படத்தை விளம்பரப்படுத்த அளித்த பேட்டியில் சேரன் குறித்துப் பேசியுள்ளார். அதில், "இயக்குநர் சேரனிடம் எனக்கே பிடிக்காத சில விஷயங்கள் உள்ளன. மேடையில் ஏதோ ஒரு குப்பையான படத்தைப் பார்த்துவிட்டு, என்னங்க இதை பார்த்திபன் மாதிரி பண்ணியிருக்கீங்க எனச் சொல்கிறார். மற்றவர்களைக் காயப்படுத்துவதைப் பற்றி கவலையே படமாட்டார் சேரன். அது அவரின் ஸ்பெஷல் குணம்" என்று தெரிவித்துள்ளார் பார்த்திபன்.
சேரன் இயக்கத்தில் பார்த்திபன் நடிப்பில் 'பாரதி கண்ணம்மா', 'வெற்றிக்கொடிகட்டு' படங்கள் உருவானது குறிப்பிடத்தக்கது.