

ரஜினி நடிக்கும் அடுத்த படத்தை சிவா இயக்கவுள்ளதாகவும், சன் பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ளதாகவும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அஜித் நடித்த 'வீரம்', 'வேதாளம்', 'விவேகம்' மற்றும் 'விஸ்வாசம்' ஆகிய படங்களை இயக்கியவர் சிவா. இதில் 'விஸ்வாசம்' படம் மிகப்பெரிய வெற்றியடைந்தது. வசூல் ரீதியாக தமிழக அளவில் பெரும் சாதனை படைத்தது. இந்தப் படம் 2019-ம் ஆண்டு பொங்கலுக்கு வெளியானது.
இந்தப் படத்தைத் தொடர்ந்து சூர்யா நடிக்கும் படத்தை சிவா இயக்கவுள்ளதாகவும், ஸ்டூடியோ க்ரீன் தயாரிக்கவுள்ளதாகவும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. ஆனால், இந்தப் படத்தின் பணிகளுக்கு இடையே ’விஸ்வாசம்’ படத்தின் வெற்றிக்குப் பாராட்டும் வகையில் ரஜினியின் அழைப்பை ஏற்றுச் சந்தித்தார் சிவா. அப்போது தனக்கு ஏதேனும் கதை இருக்கிறதா என்று கேட்டுள்ளார் ரஜினி.
இதனால் சிவா இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்கவுள்ளது ரஜினியா அல்லது சூர்யாவா எனப் பல செய்திகள் வெளியாகி வந்தன. இந்நிலையில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்தக் கூட்டணியில் உருவாகும் படத்தைத் தயாரிக்கவுள்ளதை அறிவித்துள்ளது.
சிவா இயக்கத்தில் ரஜினி நடிக்கவுள்ள படத்தைத் தயாரிக்கவுள்ளது குறித்து சன் பிக்சர்ஸ் தங்களது ட்விட்டர் பக்கத்தில், "’எந்திரன்’ மற்றும் 'பேட்ட' படங்களைத் தொடர்ந்து 3-வது முறையாக ரஜினி - சன் பிக்சர்ஸ் கூட்டணி இணைகிறது. ரஜினியின் 168-வது படமாக உருவாகும் இந்தப் படத்தை சிவா இயக்கவுள்ளார்" எனத் தெரிவித்துள்ளது.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினியின் 167-வது படமாக உருவாகியுள்ள 'தர்பார்' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்படம் 2020-ம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.