'காப்பான்' மொத்த வசூல் ரூ.100 கோடி: லைகா அதிகாரபூர்வ அறிவிப்பு

'காப்பான்' மொத்த வசூல் ரூ.100 கோடி: லைகா அதிகாரபூர்வ அறிவிப்பு
Updated on
1 min read

'காப்பான்' படத்தின் மொத்த வசூல் ரூ.100 கோடியைத் தொட்டுள்ளதாக தயாரிப்பு நிறுவனமான லைகா அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா, மோகன்லால், ஆர்யா, சயிஷா சைகல், சமுத்திரக்கனி, சிராஜ் ஜானி, பொமன் இரானி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'காப்பான்'. எம்.எஸ்.பிரபு ஒளிப்பதிவு செய்த இந்தப் படத்துக்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருந்தார். லைகா நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்து வெளியிட்டது.

செப்டம்பர் 20-ம் தேதி வெளியான இந்தப் படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. ஆனால், வசூல் ரீதியாக இந்தப் படம் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வந்தன. பெரிய முதலீடு என்பதால் இந்தப் படம் தோல்வியில் முடியும் என்றே பலரும் கருத்து தெரிவித்து வந்தார்கள்.

இதனிடையே, இந்தப் படம் வெற்றியே எனப் படக்குழுவினர் கொண்டாடி வந்தனர். ஆனால் அதிகாரபூர்வமாக எந்தவொரு தகவலுமே தெரிவிக்காமலிருந்தது படக்குழு. இந்நிலையில், ரூ.100 கோடி வசூலைத் தொட்டதை முன்னிட்டு படக்குழுவினர் அனைவருமே ஒன்றிணைந்து கொண்டாடி மகிழ்ந்தனர்.

இது தொடர்பாக 'காப்பான்' படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகா நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "எங்கள் இதயங்களில் நிறைவும், உதடுகளில் புன்னகையும் உங்களால் சாத்தியமாகியிருக்கிறது. ஒரு படத்தின் வெற்றி என்பது சகஜமானது. ஆனால் சாதனை வெற்றியென்பது அபூர்வமானது.

எங்கள் லைகா நிறுவனத்தின் தயாரிப்புகளில் நற்பெயரும், நல்ல வசூலும் தேடித் தந்தது 'காப்பான்' திரைப்படத்தின் முதல் சாதனை. கேரளாவிலும், அயல் நாடுகளிலும் அதிரிபுதிரியான வசூல் கொண்டாட்ட சாதனை. மொத்த வசூலில் ரூ.100 கோடியைத் தொட்ட படங்களின் பட்டியலில் ’காப்பான்’ படமும் சேர்ந்தது முக்கிய சாதனை.

தமிழக விவசாய அமைப்புகள் அனைத்திலிருந்தும் ஏகோபித்த பாராட்டுகளைப் பெற்றது மகத்தான சாதனை. அனைத்து தரப்பு ரசிகர்களிடமிருந்தும் குவியும் பாராட்டுகள் இன்னுமொரு சாதனை. இத்தனை சாதனைகளுக்கும் காரணமாய் இருந்த 'காப்பான்' படத்தின் அத்தனை நடிகர்களுக்கும், தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும், திரைப்பட விநியோகஸ்தர்களுக்கும், திரையரங்க உரிமையாளர்களுக்கும், இந்த வெற்றியை அங்கீகரித்த ரசிகர்களுக்கும் எங்கள் நெஞ்சார்ந்த நன்றி.

ஆதரவாய் இருந்த, ஆழமாய் ரசனையாய் விமர்சித்த ஊடக நண்பர்கள் அனைவருக்கும் நெகிழ்ச்சி கலந்த நன்றி. லைகா நிறுவனம் தனது அடுத்தடுத்த பெரிய திரைப்பட முயற்சிகளைக் கம்பீரமாகத் தொடர, நல்ல நம்பிக்கையை விதைத்திருக்கும் ’காப்பான்’ படக்குழுவினருக்கு மீண்டும் நன்றி" என்று தெரிவித்துள்ளது.

இதன் மூலம் 'காப்பான்' வெற்றிப் படமாக அமைந்துள்ளது உறுதியாகியுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in