

'மிக மிக அவசரம்' படங்களுக்குப் போதிய திரையரங்குகள் கிடைக்காத காரணத்தால், படத்தின் வெளியீடு ஒரு வாரம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
சுரேஷ் காமாட்சி இயக்கி, தயாரித்துள்ள 'மிக மிக அவசரம்'.ஸ்ரீப்ரியங்கா, முத்துராமன், ஹரிஷ், ராமதாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படத்துக்குக் கதை, வசனம் எழுதியுள்ளார் இயக்குநர் ஜெகன். படத்தின் பணிகள் அனைத்து முடிந்துவிட்டாலும், சரியான வெளியீட்டுக்காகக் காத்திருந்தது படக்குழு.
இறுதியில் இந்தப் படத்தின் வெளியீட்டு உரிமையை லிப்ரா நிறுவனம் கைப்பற்றியது. இதனைத் தொடர்ந்து அக்டோபர் 11-ம் தேதி வெளியீடு என்று விளம்பரப்படுத்தும் பணிகளைத் தொடங்கியது. பல்வேறு இயக்குநர்களுக்கு இந்தப் படம் திரையிட்டுக் காட்டப்பட்டு, அவர்கள் தெரிவித்த கருத்துக்களை வெளியிட்டது படக்குழு. நேற்று (அக்டோபர் 9) பத்திரிகையாளர்களும் இந்தப் படம் திரையிடப்பட்டது.
இந்நிலையில், அக்டோபர் 11-ம் தேதி வெளியீட்டுக்கு இந்தப் படத்துக்கு போதிய திரையரங்குகள் கிடைக்கவில்லை. இதனால் படக்குழு மிகவும் அதிர்ச்சியடைந்தது. இதனைத் தொடர்ந்து தங்களுடைய வெளியீட்டை அக்டோபர் 18-ம் தேதிக்குத் தள்ளி வைத்துள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக 'மிக மிக அவசரம்' படத்தின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் சுரேஷ் காமாட்சியிடம் கேட்ட போது "ஒரு மாதத்துக்கு முன்பே, அக்டோபர் 11-ம் தேதி 'மிக மிக அவசரம்' வெளியீடு என்பதை அறிவித்துவிட்டோம். அதற்குப் பிறகு பல்வேறு வகைகளில் தொடர்ச்சியாக விளம்பரப்படுத்தியும் வருகிறோம். சில நாட்களுக்கு முன்பாக 'அருவம்' படமும் வந்து அக்டோபர் 11-ம் தேதி வெளியீடு என அறிவித்தார்கள்.
ஆனால், திரையரங்க நிர்வாகிகளோ 'அருவம்' படத்துக்கு மட்டும் முன்னுரிமை அளிப்பதில் நியாயமில்லை. எங்களுக்கு மிகவும் குறைவான திரையரங்குகளே அளித்தார்கள். இதனால் படத்தின் வெளியீட்டை ஒரு வாரத்துக்குத் தள்ளிவைத்து, அக்டோபர் 18-ம் தேதி வெளியிடவுள்ளோம். திரையரங்கு உரிமையாளர்கள் இப்படிச் செய்வதில் கொஞ்சம் கூட நியாயமில்லை.
பெரிய ஹீரோக்கள் கால்ஷீட் வாங்கி மட்டும் தான் படங்கள் தயாரிக்க வேண்டும் என்ற சட்டம் எதுவும் உள்ளதா? இவர்கள் செய்வதைப் பார்த்தால் சின்ன படங்களே தயாரிக்கக் கூடாது என்று பண்ணுகிறார்கள்" எனக் காட்டமாகத் தெரிவித்தார் சுரேஷ் காமாட்சி