

'அசுரன்' படத்தின் வெற்றியால், வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யாவை நடிக்க வைக்க முதற்கட்டப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு உள்ளது.
வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ், மஞ்சு வாரியர், கென் கருணாஸ், டிஜே, பாலாஜி சக்திவேல் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் 'அசுரன்'. வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். தாணு தயாரிப்பில் வெளியான இந்தப் படத்துக்கு விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
தனுஷ் நடித்த படங்களின் வசூலில், 'அசுரன்' கண்டிப்பாக முதலிடம் பிடிக்கும் என்று விநியோகஸ்தர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், பி மற்றும் சி சென்டர்கள் எனக் கூறப்படும் சென்னையைத் தாண்டி இதர பகுதிகளிலும் கூட இந்தப் படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருவது குறிப்பிடத்தக்கது.
'அசுரன்' படத்துக்குப் பிறகு பாடலாசிரியர் நா.முத்துக்குமாரின் ‘பட்டாம்பூச்சி விற்பவன்’ புத்தகத்தில் இடம்பெற்றுள்ள தாத்தா, பேரனை மையமாகக் கொண்ட கவிதை ஒன்றை எடுத்து 5 ஆண்டுகளுக்கு முன்பே இயக்குநர் வெற்றிமாறன் திரைக்கதை அமைத்து வைத்திருந்தார். இதுதொடர்பாக மறைந்த பாடலாசிரியர் நா.முத்துக்குமாரிடம் சில ஆண்டுகளுக்கு முன்பே வெற்றிமாறன் ஆலோசித்ததாகவும் தெரிகிறது.
சிறிய பட்ஜெட் படமாக உருவாக்கத் திட்டமிட்டிருந்த இந்தக் கதையை காமெடி நடிகர் சூரியிடம் கூறி அவரை நடிக்க வைக்கவும் வெற்றிமாறன் சம்மதம் பெற்றிருந்தார். அடுத்தடுத்து ‘விசாரணை’, ‘வட சென்னை’ என பிஸியாக இருந்ததால் அவர் உடனடியாக அந்த வேலையைத் தொடங்கவில்லை. தற்போது இப்படத்தைத்தான் அவர் அடுத்த படமாக எடுக்கவிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் தனுஷ், மஞ்சு வாரியர் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘அசுரன்’ திரைப்படம் வசூல் ரீதியாகவும் பெரும் வரவேற்பைப் பெற்றிருப்பதால் முன்னணி நடிகர்களுக்குக் கதை சொல்லி பெரிய பட்ஜெட் படம் இயக்கும் வாய்ப்பும் வெற்றிமாறனைத் துரத்துகிறது. ஆகவே, தனது அடுத்த படம் பெரிய பட்ஜெட் படமா? அல்லது சூரியை வைத்து எடுக்கத் திட்டமிட்டிருக்கும் படமா என இன்னும் சில வாரங்களுக்கு பிறகுதான் வெற்றிமாறன் முடிவெடுப்பார் எனத் தெரிகிறது.
மேலும், வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யாவை நடிக்க வைக்கவும் பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது. தற்போது தான் முதற்கட்டப் பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளதால், இந்தக் கூட்டணி இணையுமா என்பது அடுத்தடுத்த கட்டப் பேச்சுவார்த்தைகளில் தெரியவரும்.