

காதல் முறிவால் தனக்கு எந்த வருத்தங்களும் இல்லை என்று நடிகை ஸ்ருதிஹாசன் தெரிவித்துள்ளார்
தமிழில் சூர்யாவுடன் 'சிங்கம் 3' படத்தில் நடித்திருந்தார் ஸ்ருதி ஹாசன். அதற்குப் பிறகு எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்து வரும் 'லாபம்' படத்தில் நாயகியாக நடித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து புதிதாகத் தமிழில் வேறு எந்தவொரு படத்திலுமே ஒப்பந்தமாகவில்லை ஸ்ருதி ஹாசன்.
படங்களுக்கு இடையே இசை ஆல்பங்கள் உருவாக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார். இதனிடையே லட்சுமி மஞ்சு நடத்தும் 'Feet up with Stars' நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பல்வேறு திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டு தங்களது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறார்கள். இதில் ஸ்ருதி ஹாசனும் கலந்து கொண்டுள்ளார்.
இந்நிகழ்ச்சியில் காதலர் தினக் கொண்டாட்டம் தொடர்பான கேள்விக்கு ஸ்ருதிஹாசன், "எனக்குக் காதல் தினம் சுத்தமாகப் பிடிக்காது. எந்த முட்டாள் அதைக் கண்டுபிடித்தது? ஒரு குறிப்பிட்ட நாளில் தான் பலூன், பொம்மை எனக் காதலைக் கொண்டாட வேண்டும் என்றில்லை.
பள்ளியில் நான் டாம் பாய். ஆண்கள் என்னை கிரிக்கெட் ஆட அழைத்துக்கொண்டு போகும் அளவுக்கு இருப்பேன். அதனால் காதலர் தினத்தன்று எனக்குப் பயங்கர மன அழுத்தமாக இருக்கும். யாரும் எனக்கு வாழ்த்து அட்டை கூட கொடுக்க மாட்டார்கள்.
எந்தப் பையனும் என்னிடம் வந்து பேசுவதில்லை என 9-வது படிக்கும்போது என் நெருங்கிய நண்பன் எனக்காக வருத்தப்பட்டிருக்கிறான். அதனால் பாவப்பட்டு என்னிடம் கேட்கும்போது நான் அவனைத் திட்டியிருக்கிறேன். இன்று கூட அவன் என் நல்ல நண்பன். இப்போது, நல்ல வேளை நான் தப்பித்துவிட்டேன் என்று கிண்டல் செய்கிறான்" என்று பதிலளித்துள்ளார் ஸ்ருதிஹாசன்.
மேலும், காதல் முறிவு தொடர்பான கேள்விக்கு ஸ்ருதிஹாசன், "முதலில் நான் மிகவும் அப்பாவியாக இருந்தேன். எனக்கு எல்லாம் தெரியும் என்று நினைத்துக்கொண்டிருப்பேன். ஆனால் எனக்கு நிறையத் தெரிந்திருக்கவே இல்லை. மற்றவர்களால் என்னிடம் எளிதாக ஆதிக்கம் செலுத்த முடிந்தது.
நல்லவர்கள் நல்ல சூழல்களில் நல்லவர்களாக இருக்கிறார்கள், சில சமயம் எதிர்மறையான சூழலில் அவர்களால் நல்லவர்களாகவே இருக்க முடியாது இல்லையா?. எனக்கு எந்த வருத்தங்களும் இல்லை. இதுவரை எனக்கு இருந்த உறவுகள் எல்லாவற்றையும் மகிழ்ச்சியுடனேயே நினைவுகூர்கிறேன். ஒவ்வொன்றும் எனக்கு நல்ல அனுபவமாக இருந்திருக்கின்றன. நிறைய கற்றிருக்கிறேன்.
ஆனால் எப்போதுமே அந்த ஒரு உயர்ந்த காதலுக்காக நான் பார்த்துக்கொண்டிருப்பதாக உணர்கிறேன். அது கிடைக்கும்போது இதற்காகத்தான் காத்துக்கொண்டிருந்தேன் என்று மகிழ்ச்சியுடன் அறிவிப்பேன்" எனவும் பதிலளித்துள்ளார் ஸ்ருதிஹாசன்.