

சமகாலத்தில் ஒரு நடிகர் திலகம் கிடைத்துள்ளார் என 'அசுரன்' படத்தில் தனுஷ் நடிப்புக்கு, தயாரிப்பாளர் தாணு புகழாரம் சூட்டியுள்ளார்.
வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ், மஞ்சு வாரியர், கென் கருணாஸ், டிஜே, பாலாஜி சக்திவேல் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் 'அசுரன்'. இந்தப் படத்துக்கு விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. தனுஷின் திரையுலக வாழ்க்கையில் அவருடைய மிகப்பெரிய வெற்றிப் படமாக 'அசுரன்' தான் வசூல் ரீதியில் இருக்கும் என விநியோகஸ்தர்கள் தரப்பில் தெரிவித்தார்கள்.
இது தொடர்பாக 'அசுரன்' தயாரிப்பாளர் தாணுவிடம் கேட்ட போது, "இந்தப் படத்தின் மையப்புள்ளியை இயக்குநர் வெற்றிமாறன் என்னிடம் விவரிக்கும்போதே, படம் பெரிய வெற்றியடையும் என உறுதியாக நம்பினேன். அதற்குக் கட்டியம் கூறுவது மாதிரி இந்த வெற்றியும் அமைந்துள்ளது. நாங்கள் அனைத்து வகைகளிலும் போற்றி, பாராட்டி மகிழ்கிறோம்.
வெற்றிமாறனுடைய முழு எண்ணத்துக்கு, உழைப்புக்குக் கட்டியம் கூறுவது மாதிரி தனுஷ் தன் நடிப்பாற்றலை வெளிப்படுத்தியுள்ளார். அவர் படத்துக்கு மிகப்பெரிய அடித்தளம் அமைத்துக் கொடுத்தார். சமகாலத்தில் ஒரு நடிகர் திலகம் கிடைத்துள்ளார் எனப் பெருமைப்பட்டுக் கொள்ளலாம். சிவாஜி சார் இருந்திருந்தால் இந்தப் பிள்ளையைப் பார்த்து உச்சி முகர்ந்திருப்பார்" என்று தெரிவித்தார் தாணு.
மேலும், 'வேலையில்லா பட்டதாரி' படத்தின் வசூல்தான் தனுஷ் படங்களில் முதல் இடத்தில் இருக்கிறது. அதை 'அசுரன்' முறியடிக்குமா என்ற கேள்விக்கு "ஆமாம். உண்மை தான்" என்று பதிலளித்தார் தாணு.