

லட்சுமண் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்து வரும் படத்துக்கு 'சர்வாதிகாரி' என்ற பெயர் பரிசீலனையில் இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
'ஜெயம்' படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமான ஜெயம் ரவிக்கு, 'கோமாளி' 24-வது படமாகும். இதனைத் தொடர்ந்து ஜெயம் ரவியின் 25-வது படத்தின் இயக்குநர் யார் என்பது குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகின. 'தனி ஒருவன் 2' ஆக இருக்கும் என்று தகவல் வெளியாகி வந்த நிலையில், லட்சுமண் இயக்கத்தில் உருவாகும் படத்தை தன் 25-வது படமாக அறிவித்தார் ஜெயம் ரவி.
லட்சுமண் - ஜெயம் ரவி கூட்டணி ஏற்கெனவே 'ரோமியோ ஜூலியட்' மற்றும் 'போகன்' ஆகிய படங்களில் இணைந்து பணிபுரிந்துள்ளது. இக்கூட்டணி தற்போது இணையும் 3-வது படமாக இது அமைந்துள்ளது. இதன் பூஜையுடன் கூடிய படப்பிடிப்பு தொடங்கப்பட்டு நடைபெற்று வந்தது.
நாயகியாக நிதி அகர்வால், காமெடி நடிகர் சதீஷ் ஆகியோர் ஜெயம் ரவியுடன் நடித்து வந்தார்கள். தற்போது இந்தப் படத்தின் தலைப்புடன் கூடிய ஃபர்ஸ்ட் லுக் அக்டோபர் 11-ம் தேதி வெளியாகவுள்ளது. இது தொடர்பாக விசாரித்த போது, 3 தலைப்புகள் பரிசீலனையில் இருப்பதாகப் படக்குழுவினர் சார்பில் தெரிவித்தார்கள்.
அதில் 'சர்வாதிகாரி' தலைப்பும் இடம்பெற்றுள்ளது. படத்தின் கதைக்களத்துக்கு இந்தத் தலைப்பே பொருத்தமாக இருக்கும் என்பதால், இதையே வைக்கலாம் என்று படக்குழு முடிவு செய்திருப்பதாகத் தெரிகிறது. இந்தப் படத்தை 'அடங்க மறு' படத்தைத் தயாரித்த சுஜாதா விஜயகுமார் தயாரித்து வருகிறார். இமான் இசையமைப்பாளராகவும், டெட்லி ஒளிப்பதிவாளராகவும் பணிபுரிந்து வருகிறார்கள்.