

மணிரத்னம் உள்ளிட்ட 49 பேர் மீதான தேசத் துரோக வழக்கு குறித்து சரத்குமார் தன் கருத்தைத் தெரிவித்துள்ளார்.
நாட்டில் நடக்கும் கும்பல் வன்முறை தொடர்பாக, பிரதமர் மோடிக்கு கடந்த ஜூலை மாதம் கடிதம் எழுதிய இயக்குநர் மணிரத்னம், ராமச்சந்திர குஹா, அபர்ணா சென் உள்ளிட்ட 49 பிரபலங்கள் மீது தேசத் துரோக வழக்கு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் பிஹாரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்குப் பதிவு இந்தியத் திரையுலகப் பிரபலங்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக, தமிழ்த் திரையுலகப் பிரபலங்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் தங்களுடைய கடும் கண்டனத்தைப் பதிவு செய்து வருகிறார்கள்.
இந்நிலையில் சமத்துவ மக்கள் கட்சியின் தலைவரும், நடிகருமான சரத்குமார் தனது ட்விட்டர் பதிவில், "49 பிரபலங்களின் கருத்துகள் குறித்த சர்ச்சை நம் அரசியலமைப்புச் சட்ட வரம்புக்குள்தான் இருக்கிறது. இது 19 1ஏ பிரிவின் கீழ் கருத்துச் சுதந்திரத்தை அளிக்கிறது. இதை அரசாங்கத்துக்கோ அல்லது பிரதமருக்கோ எதிரான செயலாகக் கருத முடியாது" என்று தெரிவித்துள்ளார்.
தற்போது அதிமுக - பாஜக கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்து வருபவர் சரத்குமார். மேலும், மணிரத்னம் தயாரிப்பில் உருவாகி வரும் 'வானம் கொட்டட்டும்' படத்திலும் முக்கியக் கதாபாத்திரத்தில் சரத்குமார் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.