'அசுரன்' கிளைமாக்ஸில் அழுதுவிட்டேன்: கென் கருணாஸ் பேட்டி

'அசுரன்' கிளைமாக்ஸில் அழுதுவிட்டேன்: கென் கருணாஸ் பேட்டி
Updated on
2 min read

'அசுரன்' கிளைமாக்ஸ் காட்சியில் உணர்ச்சிகரமாகி அழுதுவிட்டேன் என்று கென் கருணாஸ் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியாகியுள்ள படம் 'அசுரன்'. அதில் தனுஷின் நடிப்புக்கு மட்டுமன்றி கென் கருணாஸின் நடிப்புக்கும் பலரும் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள். வெற்றிமாறனிடம் 'பொல்லாதவன்' படப்பிடிப்பின் போதே மகன் கென்னை அறிமுகப்படுத்தி வைத்துள்ளார் கருணாஸ். அப்போது பார்த்தவரைத் தான் சிதம்பரம் கதாபாத்திரத்தில் நடிக்க முடிவு செய்தேன் என்று 'அசுரன்' இசை வெளியீட்டு விழாவில் குறிப்பிட்டார் இயக்குநர் வெற்றிமாறன்.

இந்தப் படத்துக்கு முன்பாக 'அழகு குட்டி செல்லம்' மற்றும் 'அம்பாசமுத்திரம் அம்பானி' உள்ளிட்ட படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார் கென் கருணாஸ். அவர் 16 வயது சிறுவனாக தனுஷின் இளைய மகன் கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம்தான் 'அசுரன்'.

லயோலா கல்லூரியில் பி.காம் படித்துக் கொண்டிருக்கும் கென் 'தி இந்து' ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:

எனக்கு வெற்றி சாரிடமிருந்து அழைப்பு வந்தது. படம் எடுக்கப்போவதாகவும் நான் அதில் நடிக்க வேண்டும் என்றும் சொன்னார். கொஞ்சம் எடை குறைக்கச் சொன்னார். அப்படித்தான் நான் 'அசுரன்' படத்தில் நடிக்க ஆரம்பித்தேன். நான் வெக்கை நாவலைப் படித்ததில்லை. ஆனால் நாவலின் மையக்கருவை வெற்றிமாறன் அப்படியே வைத்திருக்கிறார். தனுஷ் சார் கதாபாத்திரத்துக்கும் எனது கதாபாத்திரத்துக்கும் ஒரே சரியான முக்கியத்துவத்தைத் தந்திருக்கிறார்.

வெக்கை நாவல் சிதம்பரம் கதாபாத்திரத்தைச் சுற்றியே நடக்கும். இங்கு தந்தை கதாபாத்திரம் தனது குடும்பத்தைக் காப்பாற்ற எந்த எல்லைக்கும் போகிறார். படம் ஒட்டுமொத்தமாக எப்படியிருக்கும் என்பதை வெற்றிமாறன் என்னிடம் சொன்னார். இதன் பிறகே படப்பிடிப்பு தொடங்கியது.

என்னைவிட என் நண்பர்கள்தான் நான் இந்தக் கதாபாத்திரத்தில் நடிப்பது குறித்து ஆர்வத்துடன் இருந்தனர். சிதம்பரம் கதாபாத்திரத்தைச் சரியாக நடித்துவிட முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது. அதனால் படப்பிடிப்புத் தளத்தில் அனைவருக்கும் எனது அணுகுமுறை பிடித்தது.

படத்தின் கிளைமாக்ஸ் காட்சிதான் என்னை மிகவும் பாதித்தது. படப்பிடிப்பின்போது நான் மிகவும் உணர்ச்சிகரமாகி அழ ஆரம்பித்துவிட்டேன். அவ்வளவு தீவிரமாக இருந்தது. பின்னர் தனுஷ் சார் தான் எனக்கு ஆறுதல் சொல்லி, தட்டிக்கொடுத்து, நான் நன்றாக நடித்ததாகப் பாராட்டினார்.

அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று திட்டம் எதுவும் இல்லை. ஆனால் தொடர்ந்து நடிக்க வேண்டும். எந்த மாதிரியான கதாபாத்திரமாக இருந்தாலும், எல்லோராலும் மதிக்கப்படும் ஒரு கலைஞனாக இருக்க வேண்டும்''.

இவ்வாறு கென் கருணாஸ் தெரிவித்துள்ளார்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in