மணிரத்னம் உள்ளிட்ட 49 பேர் மீது தேசத் துரோக வழக்கு: உச்ச நீதிமன்றம் தலையிட கமல் வேண்டுகோள்

மணிரத்னம் உள்ளிட்ட 49 பேர் மீது தேசத் துரோக வழக்கு: உச்ச நீதிமன்றம் தலையிட கமல் வேண்டுகோள்
Updated on
1 min read

மணிரத்னம் உள்ளிட்ட 49 பேர் மீது தேசத் துரோக வழக்குப் பதிவு செய்திருப்பது தொடர்பாக உச்ச நீதிமன்றம் தலையிட கமல் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நாட்டில் நடக்கும் கும்பல் வன்முறை தொடர்பாக, பிரதமர் மோடிக்கு கடந்த ஜூலை மாதம் கடிதம் எழுதிய இயக்குநர் மணிரத்னம், ராமச்சந்திர குஹா, அபர்ணா சென் உள்ளிட்ட 49 பிரபலங்கள் மீது தேசத் துரோக வழக்கு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் பிஹாரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்குப் பதிவு இந்தியத் திரையுலகப் பிரபலங்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாகத் தமிழ் திரையுலகப் பிரபலங்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் தங்களுடைய கடும் கண்டனத்தைப் பதிவு செய்து வருகிறார்கள்.

இது தொடர்பாக கமல் தனது ட்விட்டர் பதிவில், "இணக்கமான இந்தியாவையே பிரதமர் விரும்புகிறார். நாடாளுமன்றத்தில் அவரது அறிக்கைகள் அதை உறுதி செய்கின்றன. அதை மாநிலங்களும் அதன் சட்டங்களும் பின்பற்ற வேண்டாமா? பிரதமரின் ஆசைக்கு முரணாக என் சக கலைஞர்கள் 49 பேர் மீது தேசத் துரோக குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.

நம் உச்ச நீதிமன்றம் இதில் தலையிட்டு, ஜனநாயகத்தை நிலைநிறுத்தும் வண்ணம், பிஹாரிலிருந்து போடப்பட்ட இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என ஒரு குடிமகனாக வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன்" என்று கமல் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in