யூ டியூப் சேனல் தொடங்கினார் இயக்குநர் பாரதிராஜா

யூ டியூப் சேனல் தொடங்கினார் இயக்குநர் பாரதிராஜா
Updated on
1 min read

இயக்கம், நடிப்பு என்பதைத் தாண்டி தற்போது புதிதாக யூ டியூப் சேனல் ஒன்றையும் தொடங்கியுள்ளார் இயக்குநர் பாரதிராஜா.

தமிழ்த் திரையுலகில் ரஜினி, கமல் தொடங்கிப் பல முன்னணி நடிகர்களின் படங்களை இயக்கியவர் பாரதிராஜா. '16 வயதினிலே', 'சிகப்பு ரோஜாக்கள்', 'அலைகள் ஓய்வதில்லை', 'மண் வாசனை', 'முதல் மரியாதை' உள்ளிட்ட பல படங்களை இயக்கியுள்ளார். தேசிய விருது, தமிழக அரசு விருது உள்ளிட்ட விருதுகளையும் வென்றுள்ளார். 2004-ம் ஆண்டு பாரதிராஜாவுக்கு பத்மஸ்ரீ விருது கொடுத்து, மத்திய அரசு கவுரவித்தது.

இவரது இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஓம்' சரியான வெளியீட்டுத் தேதிக்காகக் காத்திருக்கிறது. இயக்கத்தைத் தாண்டி 'படை வீரன்', 'குரங்கு பொம்மை', 'நம்ம வீட்டுப் பிள்ளை', 'ராக்கி' உள்ளிட்ட பல படங்களில் குணச்சித்திரக் கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளார்.

இயக்கம், நடிப்பு என்பதைத் தாண்டி இப்போது புதிதாக யூ டியூப் சேனல் ஒன்றையும் தொடங்கியுள்ளார் இயக்குநர் பாரதிராஜா. 'என் இனிய தமிழ் மக்களே' என்று தனது யூ டியூப் பக்கத்துக்குப் பெயரிட்டுள்ளார். இதில் வெளியிட்டுள்ள முதல் வீடியோவில் "என் இனிய தமிழ் மக்களே, உங்கள் பாசத்துக்குரிய பாரதிராஜா. நீங்கள் என் மீது எவ்வளவு பாசம் வைத்திருக்கிறீர்கள். மண்ணோடும் மொழியோடும் மக்களோடும் நான் சார்ந்து வாழ்ந்ததைத்தான் திரைப்படங்களின் வாயிலாகச் சொல்லியிருக்கிறேன். ஊடகமாகவும் அழகாகச் சொல்லுவேன்.

சினிமாவின் நுணுக்கங்களையும் உங்களோடு பகிர்ந்துகொள்ள இருக்கிறேன். அண்ணாந்து பார்த்த கலைஞர், எம்ஜிஆர், சிவாஜி, மேடம் ஜெயலலிதா. அவரோடு நான் முரண்பட்டது என எல்லாவற்றையும் நான் உங்களுடன் பகிர்ந்து கொள்ள இருக்கிறேன். சுவையாகவும் இருக்கும், கொஞ்சம் சுதந்திரமாகவும் இருப்பேன். ஓ. பாரதிராஜாவுக்கு இத்தனை முகங்கள் இருக்கிறதா என்று நீங்கள் நினைப்பீர்கள். இதை ஒரு புத்தகமாக வெளியிடலாம், வாசிப்பு குறைந்துவிட்ட காலமிது. ஆகையால் தான் யூ டியூப்பின் வழியாக உங்களோடு நான் உரையாடுகிறேன்" என்று பேசியுள்ளார் இயக்குநர் பாரதிராஜா.

தமிழ்த் திரையுலகின் முன்னணி இயக்குநரான பாரதிராஜா தற்போது யூ டியூப் சேனல் தொடங்கியதற்குப் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in