நடிகர் சங்கத்துக்கு பதிவுத்துறை நோட்டீஸ் ஏன்? - பின்னணித் தகவல்களுடன் பூச்சி முருகன் விளக்கம்

நடிகர் சங்கத்துக்கு பதிவுத்துறை நோட்டீஸ் ஏன்? - பின்னணித் தகவல்களுடன் பூச்சி முருகன் விளக்கம்
Updated on
2 min read

நடிகர் சங்கத்துக்கு பதிவுத்துறை நோட்டீஸ் ஏன் என்பது குறித்து பின்னணித் தகவல்களுடன் பூச்சி முருகன் விளக்கம் அளித்துள்ளார்.

நடிகர் சங்கத்துக்கான தேர்தல் முடிவடைந்துவிட்டாலும், வாக்குகள் இன்னும் எண்ணப்படாமல் இருக்கிறது. இது தொடர்பாக வழக்கு விசாரணை சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதன் இறுதித் தீர்ப்பு வரும் அக்டோபர் 15-ம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் பதிவுத்துறை, "சங்கம் செயல்படவில்லை என்று அறிகிறோம். நாங்கள் ஏன் தனி அதிகாரி மூலமாக நிர்வகிக்கக் கூடாது" என்று நடிகர் சங்கத் தலைவர் நாசர், செயலாளர் விஷால் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இது நடிகர் சங்க உறுப்பினர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. முன்பாக, இதே போல் தயாரிப்பாளர் சங்கத்துக்கும் தனி அதிகாரியை நியமித்து நிர்வகிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இந்த விவகாரம் தொடர்பாக நடிகர் சங்கத்தில் செயற்குழு உறுப்பினராக இருக்கும் பூச்சி முருகனிடம் கேட்ட போது, "நீதியரசர் பத்மநாபன் மேற்பார்வையில் ஜூன் 23-ம் தேதி நடிகர் சங்கத் தேர்தல் முறைப்படி நடந்தது. விஷால் தலைமையில் 29 பேர் கொண்ட ஒரு அணியும், பாக்யராஜ் சார் தலைமையில் 29 பேர் கொண்ட ஒரு அணியுமாக நின்றோம். தேர்தல் நடைபெறும் இடத்துக்குப் பாதுகாப்பு அளிக்க முடியாது என்று ஒரு வாரத்துக்கு முன்பாக காவல்துறை தடை விதித்தது. நீதிமன்றம் சென்று வாதாடி காவல்துறை பாதுகாப்பு பெற்றோம்.

தேர்தலுக்கு 2 நாட்களுக்கு முன்பு மாவட்டப் பதிவாளர் சார்பில் தேர்தலே நடத்தக் கூடாது என்றார்கள். அதற்கும் நீதிமன்றம் சென்றோம். அப்போது தேர்தலை நடத்திக் கொள்ளுங்கள், வாக்கு எண்ணிக்கை எப்போது என்பதைப் பின்னர் அறிவிக்கிறோம் என்றார்கள். கிட்டத்தட்ட 3 மாதங்களாக நீதிமன்றத்தில் வழக்கு போய்க் கொண்டிருக்கிறது. வரும் அக்டோபர் 15-ம் தேதி வழக்கு முடிவடையும் நிலையில் இருக்கிறது.

இந்தத் தேர்தலைத் தள்ளிப் போட வேண்டும் என்று நீதியரசரைச் சந்தித்து ஐசரி கணேசன் பேசினார் என நீதிபதியே நீதிமன்றத்துக்குக் கொண்டு வந்தார். அவர் செய்தது தவறு என்று 10 லட்ச ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. அக்டோபர் 15-ம் தேதி இந்த வழக்கு முடிவடையும் நிலையில் இருக்கும் பட்சத்தில், திடீரென்று அக்டோபர் 5-ம் தேதி சனிக்கிழமையன்று அலுவலக நேரம் முடிந்த பிறகு இரவு 7 மணிக்கு மேல் நோட்டீஸ் போர்டில் வந்து, தனி அதிகாரி மூலம் நடிகர் சங்கத்தை ஏன் நிர்வகிக்கக் கூடாது என்று நோட்டீஸ் ஒட்டியுள்ளார்கள்.

இதே ஐஏஎஸ் அதிகாரி பாலசந்திரன்தான் முன்பு தேர்தலுக்குத் தடை போட்டார். அதை நீதிமன்றம் சென்று ஜெயித்தோம். நடிகர் சங்கத்தில் கடந்த ஒரு மாதகாலமாக எந்தவொரு பணியுமே நடக்கவில்லை. ஏன் நாங்கள் ஒரு தனி அதிகாரி போட்டு எடுக்கக் கூடாது எனக் கேட்டுள்ளார். இதை ஏன் சொல்லியிருக்கிறார் என்றால், நடிகர் சங்கத்தின் உறுப்பினர் எம்.ஆர்.ஆர்.சந்தானம் என்ற நபர் புகார் கொடுத்திருக்கிறார். இவர் யார் என்றால் ராதாரவியின் சொந்த அண்ணன்.

ஏற்கெனவே சரத்குமார் மற்றும் ராதாரவி இருவர் மீதும் காஞ்சிபுரத்தில் உள்ள நடிகர் சங்கத்தின் நிலம் தொடர்பாகப் புகார் கொடுத்து எடுக்கவில்லை. பின்பு நீதிமன்றத்தை அணுகி இப்போது காவல்துறை இவர்கள் மீது எஃப்.ஐ. ஆர் போட்டுள்ளது. இது தொடர்பான குற்றப் பத்திரிகை விரைவில் வெளியாகவுள்ளது.

இப்படியிருக்கும் பட்சத்தில் அக்டோபர் 15-ம் தேதி நடிகர் சங்கத் தேர்தல் வழக்கு வருகிறது. சரத்குமார் - ராதாரவி மீது குற்றப் பத்திரிகை போடவுள்ளார்கள். இந்த இரண்டையும் சேர்த்து, இவர்கள் ஜெயித்தால் நமக்கு ஆபத்து என்று திட்டமிட்டே விளக்கம் கேட்டு இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இந்த நோட்டீஸ் இப்போது அவசரமாகக் கொடுக்க வேண்டிய காரணம் என்ன?. இதற்குப் பதில் அளிக்கத் தயாராக உள்ளோம். இந்த நோட்டீஸில் நடிகர் சங்கம் சமீபமாக நடைமுறையில் இல்லை என்று சொல்கிறார்கள்.

கடந்த 3 மாதமாக அனைத்துப் பணிகளும் நடைபெற்றுக் கொண்டுதான் உள்ளன. ஷூட்டிங்கின் மூலம் வரும் பணத்தை நடிகர்களுக்கு வங்கியில் போட்டு வருகிறோம். மேலும், கடந்த மாதம் வரை பென்ஷன் கொடுத்து வருகிறோம். என்னென்ன பிரச்சினைகள் வருகிறதோ, அதை எழுத்து மூலமாகப் பெற்று பதில் சொல்லி வருகிறோம். வேறு சங்கங்களுடன் நடக்கும் பேச்சுவார்த்தையில் எடுக்கப்படும் முடிவுகள் தொடர்பாக அறிக்கைகளையும் வெளியிட்டு வருகிறோம். ஒரு தவறான கண்ணோட்டத்தை உருவாக்கவே இந்த நோட்டீஸைக் கொடுத்துள்ளார்கள்.

ஜெயித்துவிடுவோம் என்றே பல தடைகளைப் போட்டு வருகிறார்கள். எத்தனை தடைகள் போட்டாலும், சட்டத்தையும் நீதியையும் நாங்கள் நம்புகிறோம். இதற்கும் நீதிமன்றம் செல்லவுள்ளோம்" என்று தெரிவித்தார் பூச்சி முருகன்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in