

வி.ராம்ஜி
எம்ஜிஆர் - சிவாஜி என்கிற ஆளுமைகள் இருந்த காலகட்டத்தில்தான், ஜெமினியும் ஜெய்சங்கரும் முத்துராமனும் எஸ்.எஸ்.ஆரும் தனித்துத் தெரிந்தார்கள். அதேபோல், அடுத்து வந்த கமல் - ரஜினி ஆளுமை கொண்டிருந்த காலத்தில்தான், விஜயகாந்த், சத்யராஜ், பிரபு, கார்த்திக், முரளி என பலரும் கொடிகட்டிப் பறந்தார்கள். அவர்களில் மிக முக்கியமானவர்... மோகன்.
அப்போது, கமலுக்கு பெண்கள் மத்தியில் மிகப்பெரிய க்ரேஸ் இருந்தது. அதேபோல், கமலுக்கு அடுத்தபடியாக, மோகனைத்தான் பெண்கள் கொண்டாடினார்கள். மிகப்பெரிய ரசிகர் கூட்டத்தை சம்பாதித்திருந்தார் மோகன். அவருடைய முதல் படம் கன்னடப்படம். ஒளிப்பதிவு மேதை பாலுமகேந்திரா இயக்கிய முதல் படம் ‘கோகிலா’. கன்னடத்தில் கமலுக்கு இதுவே முதல் படம். மோகன் நடிகராக அறிமுகமாகிய முதல் படமும் இதுதான்.
பிறகு, மகேந்திரனின் ‘நெஞ்சத்தைக் கிள்ளாதே’ படத்தின் மூலமாக தமிழில் அறிமுகமானார் மோகன். அந்தக் காலத்தில் ஆகச்சிறந்த காதல் காவியம் என்று கொண்டாடப்பட்ட ‘கிளிஞ்சல்கள்’ படத்தில், மோகனின் நடிப்பு பாராட்டப்பட்டது. பிறகு ஆர்.சுந்தர்ராஜனின் ‘பயணங்கள் முடிவதில்லை’ திரைப்படம், அனைத்துத் தரப்பு ரசிகர்களும் மோகனைக் கொண்டாடும் நிலையை ஏற்படுத்தித் தந்தது.
இந்தப் படத்துக்குப் பிறகு, மோகனுக்கு வரிசையாக படங்கள் வந்தன. மனோபாலா, மணிவண்ணன், ஆர்.சுந்தர்ராஜன், கே.ரங்கராஜ் என பல இயக்குநர்கள், ஒவ்வொரு விதமான கேரக்டர்களைக் கொடுத்தார்கள். அந்த கேரக்டர்களிலெல்லாம் நடித்து அசத்தினார் மோகன்.
மோகன் என்றால் மென்மையான கதாபாத்திரங்களைத் தாங்கி நடிப்பதில் வல்லவர் எனப் பெயர் பெற்றார். அது ‘மெல்லத்திறந்தது கதவு’, மெளனராகம்’ என நீண்டது. மோகன் என்றால், பாடல்களுக்கு பிரமாதமாக எக்ஸ்பிரஷன்ஸ் கொடுப்பார் என்று பேரெடுத்தார். ‘பயணங்கள் முடிவதில்லை’யில் தொடங்கி, ‘உதயகீதம்’, ‘இதயக்கோயில்’ என நீண்டுக்கொண்டே போனது. மணிவண்ணனின் ‘நூறாவது நாள்’, வில்லனிக் ஹீரோவாக அவரைக் காட்டியது. அந்தக் கதாபாத்திரத்தில், மிரட்டியிருந்தார் மோகன். அந்த வில்லன் கலந்த வேடம், கே. பாலாஜியின் ‘விதி’ உட்பட பல படங்களில் அவரை விளையாடச் செய்தது.
‘கோகிலா’ படத்தில் அறிமுகம் செய்த பாலுமகேந்திராவை குருவாக ஏற்றார் மோகன். பின்னாளில், ‘ரெட்டைவால் குருவி’ படத்தில், மோகனுக்கு காமெடி கலந்த ரோலைக் கொடுத்து, அந்தப் பக்கமும் மோகன் ஜெயிக்கமுடியும்; நடிக்க முடியும் என்பதை நிரூபிக்கச் செய்தார் பாலுமகேந்திரா. இது, இயக்குநர் இராம.நாராயணனின் பல படங்களில், அவரை காமெடி ஹீரோவாக்கி அந்தப் பக்கமும் ரவுண்டு வரச் செய்தது.
எண்பதுகளில், தயாரிப்பாளர்களுக்குப் பிடித்த ஹீரோ என்றால் அதில் முக்கிய இடம் பிடித்தவர் மோகன் என்கிறார்கள் விநியோகஸ்தர்கள். கால்ஷீட் கொடுத்துவிடுவார். கொடுத்ததைப் போட்டுக் குழப்பிக் கொண்டிருக்கமாட்டார். விட்டுக் கொடுக்கும் குணத்தை இயல்பாகக் கொண்டவர். மார்க்கெட் வேல்யூ உள்ளவர். எப்படிப்பட்ட கதாபாத்திரத்துக்கும் பொருந்தக் கூடியவர். மினிமம் பட்ஜெட்டில் படமெடுக்கலாம். மேக்ஸிமம் வசூலை அள்ளிவிடலாம். முதலுக்கு மோசம் இருக்காது. மோகன் படமென்றால் மினிமம் கியாரண்டி நிச்சயம் என்று தயாரிப்பாளர்களும், விநியோகஸ்தர்களும், தியேட்டர்காரர்களும் கொண்டாடுகிறார்கள்.
’மதர்லேண்ட் பிக்சர்ஸ்’ தயாரிப்பாளர் கோவைதம்பி, மோகனை வைத்து பல படங்களை தயாரித்துள்ளார். வெள்ளிவிழாப் படமான ‘நான் பாடும் பாடல்’ மாதிரியான படங்களில், கெளரவத்தோற்றத்திலாவது மோகனை நடிக்கவைத்துவிடுவார்கள். அப்படியொரு வெற்றி செண்டிமெண்ட் மோகனிடம் உண்டு.
வயது வித்தியாசமில்லாமல், எல்லோரும் கொண்டாடுகிற மாதிரி நடிகர்கள் பேரெடுப்பது அரிது. அப்படிப் பேரும்புகழும் கொண்ட நடிகர்களில், மோகனுக்கு தனியிடம் உண்டு. அதனால்தான் மோகன் படங்களுக்கு எப்போதுமே நல்ல ஓபனிங் இருந்தது. கமல், ரஜினி படங்கள் ரிலீசான சமயத்தில், மோகன் படமும் ரிலீசாகி, அவர்களை விட மோகன் படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற சரித்திரப் பதிவுகளும் நடந்திருக்கின்றன.
‘அவர் படத்துல எல்லாப் பாட்டையும் ஹிட்டாக்கிக் கொடுத்துருவார் இளையராஜா. பெரும்பாலான படங்களுக்கு இளையராஜாதான் இசை. அதனாலதான் மோகன் படங்கள் இப்படி ஹிட்டடிச்சிருக்கு’ என்று பொத்தாம்பொதுவாகச் சொல்லிவிடமுடியாது. அழுத்தமான கதைகள், உயிரோட்டமான திரைக்கதைகள், கதையின் உணர்வைச் சொல்லுகிற இசை, பாடல்கள், நடிப்பை வெளிப்படுத்துகிற காட்சி அமைப்புகள் என பலதும் கைகோர்த்ததுதான் மோகனின் வெற்றி!
ஐம்பது ரூபாய் முதலீடு செய்து நூறு ரூபாய் சம்பாதிப்பது ஒரு வகை. பத்து ரூபாய் முதலீடு செய்து, நூற்று ஐம்பது ரூபாய் சம்பாதிப்பது இன்னொரு வகை. மோகனின் படங்கள் இரண்டாவது வகை. ஆனால் அவரின் படங்கள் பலவும், முதல் ரகம் கொண்ட தரமான படங்கள் என்று கொண்டாடப்பட்டன. இன்றுவரை கொண்டாடப்பட்டு வருகின்றன.
‘என்னைப் பற்றி சொல்லுவதற்கு எத்தனையோ இருக்கு. ஆனால் பலரும் ‘மைக்’ மோகன் என்றுதான் சொல்லுகிறார்கள். அப்படி, குறிப்பிட்ட ஓர் விஷயத்தை மட்டுமே வைத்து, என்னை அடையாளப்படுத்துவதை நான் விரும்பவில்லை’ என்று மோகன் தெரிவித்தது நினைவில் இருக்கிறது (அதனால்தான் ‘மைக்’ மோகன் என்று தலைப்பு வைக்கவில்லை).
1977ம் ஆண்டு அக்டோபர் 7ம் தேதி, பாலுமகேந்திராவின் ‘கோகிலா’ ரிலீசானது. இது கன்னடப்படம். இந்தப் படம் வெளியாகி, மோகன் நடிகராக அறிமுகமாகி, 42 வருடங்களாகின்றன. பாரதிராஜாவின் ‘கிழக்கே போகும் ரயில்’ தெலுங்கில் ’தூர்ப்பு வெள்ளே ரயிலு’ என தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டது. இதில் சுதாகர் நடித்த கேரக்டரில் மோகன் நடித்தார். அங்கேயும் மிகப்பெரிய வெற்றியை அடைந்தது, இந்தப் படம். தமிழில் இவரின் அறிமுகப் படமாக வந்த மகேந்திரனின் ‘நெஞ்சத்தைக் கிள்ளாதே’ 250 நாட்களைக் கடந்து ஓடியது.
எல்லா மொழிகளிலும் வெற்றிக் கொடி நாட்டிய மோகனின் 42ம் ஆண்டின் பயணம்... இன்னும் இன்னும் தொடரட்டும். அந்தப் பயணத்துக்கு முடிவே இல்லை.
நடிகர் மோகன் வாழ்க! அவரின் பயணம் இனிதாகட்டும்.